

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ஜிகேஎம். தமிழ்க்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம்.
தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், 2026-29-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னை அண்ணா நகரில் உள்ள கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் உட்பட 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிட்டனர். இதில், ராம நாராயணன் அணி சார்பில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி 3-வது முறையாக போட்டியிட் டார்.
அவரை எதிர்த்து, நலம் காக்கும் அணி சார்பில் ஜிகேஎம். தமிழ்க்குமரன் போட்டியிட்டார். தேர்தல் அதிகாரியாக முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் செயல்பட்டார். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர், வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 788 வாக்குகள் பெற்ற தமிழ்க்குமரன், 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பைவ் ஸ்டார் கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிட் ட சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.