

“ஜி.டி.நாயுடு திரைப்படத்தை உருவாக்க வாய்ப்பு அளித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றி. அந்தல் கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் அவர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்” என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'ஜிடிஎன்' - ன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் மாதவன் பேசும்போது, “ஜி.டி.நாயுடு திரைப்படத்திற்கு முன்பே, ‘குரு’, ‘ராக்கெட்டரி’ என சில உண்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஜி.டி.நாயுடு திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு அளித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றி. திரைப்படமாக உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல் ஜி.டி.நாயுடு என்ற கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் அவர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய மேதை பற்றி ஏன் நிறைய பேருக்கு தெரியவில்லை. இன்றைக்கு நடக்கும் பல விஷயங்களை அன்றே அவர் செய்துவிட்டார். அவர் செய்த பல மாற்றங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம். இந்தப் படத்தின் மீதும் என் மீதும் எந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருந்ததோ, அதைவிட அதிக அளவில் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், “கோயம்புத்தூரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இத்தனை நாட்களாக ஜி.டி.நாயுடு மியூசியத்தை சென்று பார்க்கவில்லையே என்ற குற்றவுணர்வு இந்தப் படத்தில் நடிக்கும்போது எழுந்தது. ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போது இப்படி எல்லாம் நடந்திருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான விஷயங்களை விடவும் ஒருபடி அதிகமான விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. இதுவரை பயோபிக்கிலேயே இந்த படம் மிகப் பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை உண்டு” என்றார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பேசுகையில், "ஜி.டி.நாயுடு பற்றிய புத்தகம் ஒன்றை படித்த பொழுது ஒவ்வொரு கதையும் நல்ல காட்சியாக இருந்தது. ஒரு இயக்குநராக இந்த கதையை நிச்சயம் படமாக்க வேண்டும் எனத் தோன்றியது. சமானிய மனிதனுக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் அவருடைய கண்டுபிடிப்பின் தலையாய நோக்கம். அப்படியான மகானை பற்றி படம் எடுக்க பெரும் பலமாக இருந்த எனது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி. படக்குழுவினர் அனைவருமே ஒத்துழைப்பு கொடுத்து நடித்திருக்கின்றனர்” என்றார்.
தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன், “ராக்கெட்டரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜி.டி.என். படத்திலும் மாதவனுடன் இணைந்திருக்கிறோம். அந்த படத்தை போலவே இந்த படமும் நிச்சயம் பெரும் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை" என்றார்.
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆக.7-ம் தேதி வெளியாகிறது.