

ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை என்று ‘ரூம் பாய்’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் காட்டமாக பேசியுள்ளார்.
ஏசிஎம் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ‘ரூம் பாய்’. இதில் அறிமுக நடிகர் நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசும் போது, படக்குழுவினர் அனைவரையும் பாராட்டிவிட்டு “தாய்கிழவி படத்தை வேறு எந்த தயாரிப்பாளர் எடுத்திருந்தாலும் இவ்வளவு பெரிய மார்க்கெட்டிங் கிடைத்திருக்காது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக இருந்து தயாரித்ததோடு, அந்த படத்தில் ஒரு பாடலும் பாடினார். அந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் முழுமையாக பாடுபட்டார். அதனால்தான் அந்த ‘தாய்கிழவி’ படம் பெரிய அளவில் எளிதாக மக்களிடம் சென்றது.
இதில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் சூரிய கலா சந்திர மூர்த்தியின் மகன் தான் கதாநாயகன் நடித்துள்ளார்,அவருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இது அவருடைய முதல் படம். அவருக்கு வாழ்த்துக்கள்.
ஒரு தயாரிப்பாளர் படம் செய்யும் போது, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். ஆனால் கதையை அவர் தேர்வு செய்வதில்லை. ஆனால் படம் தோல்வியானால் அவர் தான் தெருவில் நிற்கிறார். ஆனால் இதே ஆந்திராவில் ஒட்டுமொத்த நடிகர்களும் தயாரிப்பாளரை காப்பாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் அந்த நிலைமை சுத்தமாக இல்லை. ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளருக்கு உதவுவதில்லை.
இங்கு 30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது. 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர் வருவது இல்லை. இங்கு நிறைய தவறுகள் நடக்கிறது. எல்லா தயாரிப்பாளர்களும் உங்கள் கமபெனியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யுங்கள் தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் நிற்கும்” என்று பேசினார் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்.