தென்​னிந்​தி​யா​வின் முதல் சூப்பர் ஸ்டார் இயக்கி, நடித்த ‘புது வாழ்​வு’!

தென்​னிந்​தி​யா​வின் முதல் சூப்பர் ஸ்டார் இயக்கி, நடித்த ‘புது வாழ்​வு’!
Updated on
2 min read

லட்​சுமி காந்​தன் கொலை வழக்​கில் சிறைக்​குச் சென்று திரும்​பிய பிறகு எம்​.கே.​தி​யாக​ராஜ பாகவதர், தனது நரேந்​திரா பிக்​சர்ஸ் சார்​பில் தயாரித்து நடித்த படம், ‘ராஜ​முக்​தி’. இதில் வி.என்​.ஜானகி, பி.​பானு​ம​தி, எம்​.ஜி.சக்​கர​பாணி என பலர் நடித்​தனர். எம்​.ஜி.ஆர், சிறிய கதா​பாத்​திரத்​தில் நடித்​தார்.

1948-ல் வெளி​யான இந்​தப் படம் பெரிய வரவேற்​பைப் பெற​வில்​லை. தென்​னிந்​திய சினி​மா​வின் முதல் சூப்​பர் ஸ்டா​ரான பாகவதருக்கு இது பெரிய ஏமாற்​றத்​தைத் தந்​தது. அவர் குரலில் மயங்​கிக் கிடந்த ரசிகர்​கள், இப்​படி ஒரேயடி​யாக ஆதரவு தராமல் போனதை அவர் எதிர்​பார்க்​க​வில்​லை.

பிறகு, எஃப்​.​நாகூர் தயாரித்து இயக்​கிய ‘அமரக​வி’ படத்​தில் டி.ஆர்​.​ராஜகுமாரி​யுடன் நடித்​தார் பாகவதர். 1952-ல் வெளியான இப்​பட​மும் பெரும் வெற்​றியை எட்​ட​வில்​லை. அடுத்து பி.ஏ.சுப்​பா​ராவ் இயக்​கத்​தில் அவர் நடித்த ‘சி​யாமளா’​வும் கைகொடுக்​க​வில்​லை. இதனால் ‘புது வாழ்​வு’ என்ற படத்தை தயாரித்து தானே இயக்கி, நடித்தார்.

சிறை வாழ்க்கை தந்​திருந்த நெகட்​டிவ் இமேஜை மாற்றி தனக்கு புது வாழ்வு கிடைக்​கும் என்ற நம்​பிக்​கை​யில் இப்​படத்தை ஏராள​மான பொருட்செலவில் கடன் வாங்கி உரு​வாக்கி​னார், பாகவதர்.

இதில், மாதுரி தேவி, பி.பி.ரங்​காச்​சா​ரி, லலி​தா, குமாரி துளசி, என்.எஸ்​.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.எஸ்​.​பாலை​யா, துரை​ராஜ், அம்​பி​கா, ‘ஆழ்​வார்’ குப்​புசாமி, கே.என். கமலம், கே.ஏ.தங்​கவேலு, ‘குலதெய்​வம்’ ராஜகோ​பால், எஸ்​.ஆர்​.கோ​பால், டி.பி.பொன்​னு சாமி பிள்​ளை, டி.​வி.கல்​யாணி அம்​மாள் என பலர் நடித்​தனர்.

கிராமத்து இளைஞ​னான வைகுண்​டம் (பாகவதர்) நல்ல பாடகன். அவனுக்கு அங்​குள்ள நாகம்​மாள் (லலி​தா) மீது காதல் வரு​கிறது. வழக்​கம்​போல காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் நாகம்​மாளின் சகோ​தரர், வைகுண்​டத்தை மரத்​தில் கட்டி வைக்​கிறார்.

அவ்​வழியே வரும் பணக்​காரப் பெண்​ணான சுபா (மாதுரி தேவி) வைகுண்​டத்​தைக் காப்​பாற்​றி, தனது நகரத்​துக்கு அழைத்​துச் செல்​கிறாள். அவரின் பெயரை மாற்றி சிறந்த பாடக​ராக்​கு​கிறார்.

புகழும் வசதி​யும் கிடைத்தப் பிறகு பெற்​றோரைப் புறக்கணித்​து, அவர்​களைத் தவறாக நடத்​துகிறார் வைகுண்​டம். காதலி நாகம்மாள் அவரது நடத்​தையால் தற்​கொலை செய்ய முயற்​சிக்​கிறார். பிறகு தவறை உணர்ந்து வைகுண்டம் எப்படித்திருந்துகிறார் என்​பது கதை.

இதன் கதை, வசனத்தை எழு​தி​ய​வர் இளங்​கோவன். அவருடன் ஏ.கே.வேலன், இறை​முடி மணி, சுரதா ஆகியோ​ரும் இணைந்து எழு​தினர். நியூடோன் ஸ்டூடியோ​வில் படமான இதற்​குப் பாகவதரின் சகோ​தரர் எம்​.கே.சண்​முகம் தயாரிப்​புப் பொறுப்​பிலிருந்​தார். ஆர்​.சம்​பத் ஒளிப்​ப​திவு செய்​திருந்​தார். ஜி.​ராம​நாதனும் சி.என்​.​பாண்​டுரங்​க​னும் இசை அமைத்​தனர்.

பாப​நாசம் சிவன், தஞ்சை ராமையா தாஸ், ஏ.மருத​காசி, நடராஜ சுந்​தரம், சரவணபவானந்​தா, சுரதா பாடல்​களை எழு​தினர். 18-க்கும் மேற்பட்ட பாடல்​கள் படத்தில் இடம்பெற்றன.

வழக்​கம்​போல தியாக​ராஜ பாகவதரே பெரும்​பாலான பாடல்​களைப் பாடி​னார். பார​தி​யாரின் ‘சுட்​டும் விழி சுடர்​தான் கண்​ணம்​மா’ என்ற பாடலை மென்​மை​யான குரலில் மெல்​லிசை​யாகப் பாடி​னார். இது உள்பட பல பாடல்​கள் அப்​போது ஹிட்​டா​யின. என்.எஸ்​.கிருஷ்ணனும் மதுர​மும் ஒரு நகைச்​சுவை டூயட் பாடலைப் பாடினர்.

அதிகப் பாடல்​களே முக்​கி​யம் என்ற நிலை​யில் இருந்து திரைப்​படங்​கள் மாறிக் கொண்​டிருந்த காலத்​தில் பாகவதர் இந்​தப் படத்​தி​லும், நின்​றால் பாடல், நடந்​தால் பாடல் என்று வைத்​திருந்​தது விமர்​சிக்​கப்​பட்​டது. அவர் நடித்த ‘ஹரி​தாஸ்’ கதையையை கொஞ்​சம் உல்டாவாக்கி இப்​படத்தை எடுத்​த​தாக​வும் கூறப்​பட்​டது.

பணக்​கார ஹீரோ, தாய், தந்​தையை மதிக்​காமல் மனம் போன போக்​கில் கேளிக்​கை​களில் ஈடு​பட்​டு, இறு​தி​யில் பெற்​றோரே தெய்​வம் என திருந்​திப் பாடி போற்​று​வது ‘ஹரி​தாஸ்’.

ஏழை​யாக இருந்து பணக்​கார​ராகும் ஹீரோ, தாய், தந்​தையை அவம​திக்​கிறார். பின்​னர் திருந்தி அவர்​களைத் தெய்​வ​மாக நினைத்து பாடி, அவர்​கள் ஆசி​யுடன் காதலியைக் கைப்​பிடிப்​பது ‘புது வாழ்​வு’ என்​றும் விமர்​சனங்​கள் எழுந்​தன.

இதன் பாடல்​கள் ஹிட்​டான அளவுக்​குப் படம் ஓடவில்​லை. அதற்​கு, டைரக்‌ஷன் பற்றிய அனுபவ​ம் இல்​லாத பாகவதர் இயக்​கியது​தான் காரணம் என்​றார்​கள். சிறைக்​குச் சென்று திரும்​பிய பிறகு பாகவதர் தயாரித்த, நடித்த எந்​தப் படமும் அவர் இமேஜை உயர்த்​த​வில்லை என்​பது சோகம்.

‘புது வாழ்​வு’ திரைப்​படம் 1957-ம் ஆண்டு இதே நாளில் சில திரையரங்​கு​களில் வெளி​யானது. பின்​னர் மார்ச் 22-ல் தமிழ்​நாடு முழு​வதும் ரிலீஸ் ஆனது. இன்​றோடு 69 வருடங்​களைக் கடந்​து​விட்​டது ‘புது வாழ்​வு’. இப்​படத்​துக்கு பிறகு நடித்த ‘சிவ​காமி’, பாகவதருக்கு கடைசி படமாக அமைந்து விட்​டது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: egnathraj.c@hindutamil.co.in

தென்​னிந்​தி​யா​வின் முதல் சூப்பர் ஸ்டார் இயக்கி, நடித்த ‘புது வாழ்​வு’!
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in