

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் சேரன் வெற்றி பெற்றார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் சென்னை வடபழநியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் ‛நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பாக தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரனும், ‛திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி' சார்பாக தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதனும் போட்டியிட்டனர். மேலும், துணை தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் என மொத்தம் உள்ள 21 பதவிகளுக்கு இரு அணிகள் சார்பாகவும் வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இத்தேர்தலில் மொத்தம் பதிவான 432 ஓட்டுகளில் ‛நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட சேரன் 279 வாக்குகளும், ‛திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி' சார்பாக போட்டியிட்ட வி.சி.குகநாதன் 155 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குனர் சேரன் தேர்வாகியுள்ளார்.