

விஜய்யை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது போன்றதாகும் என்று எஸ்.ஏ.சிக்கு இயக்குநர் சேரன் பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில், அப்பா எஸ்.ஏ.சிக்கு ரூ.5 கோடி கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.ஏ.சி அளித்த பேட்டியிலும் விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கத்தினை குறிப்பிட்டு இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் இயக்குநர் சேரன், “’சட்டம் ஒரு இருட்டறை’, ’நீதிக்கு தண்டனை’, ’நான் சிகப்பு மனிதன்’ போன்ற அரசியல் விழிப்புணர்வு படங்களை மக்களுக்கு தந்த SAசந்திரசேகர், இப்போது தனது பிள்ளையை காப்பாற்ற களத்தில் திடீரென பேட்டிகள் அளிக்கிறார்.
பெரும் அரசியல் பார்வை உள்ள ஒரு மனிதர் தனது மகனின் அரசியலில் தெளிவும் உழைப்பும் தொலைநோக்கு சிந்தனையும் இல்லை என தெரிந்தும் அவரை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது போன்றதாகும்.
அடுத்த தலைமுறை இளைஞர்களை அவர்களுக்கான அரசியல் புரிதலை உள்வாங்கி கற்றுக்கொடுக்காமல் வெறும் கூட்டம் காண்பிக்க பயன்படுத்தி பலனடைய நினைப்பது சரியா என யோசிக்காமல் தனது பிள்ளை என்பதால் இவரைப் போன்ற பெரும் முதிர்ச்சியானவர்கள் விஜய்யை காப்பாற்ற அரசியலில் ஊக்கமளித்து செயல்படுவது வருத்தமளிக்கிறது.
கற்றுக்கொடுங்கள் முதலில்.. தயாராக்குங்கள் அவரையும் அவர் ரசிகர்களையும், பின்னர் எல்லோருக்கும் நாம் தேவையா என அவரே முடிவு செய்வார்.
நீங்கள் இந்த சமூகத்துக்கு எந்த தீங்கும் விளைந்துவிட கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு. அடுத்த தலைமுறையை ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள் இவர்கள். SAC அய்யாவிற்கு அவர் பிள்ளை முக்கியமெனில் நமக்கு நம் பிள்ளைகள் முக்கியம். சிந்தியுங்கள் மக்களே” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.