

சென்னை: கோபி நயினார் இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘கருப்பர் நகரம்’ திரைப்படத்தை அக்.27 வரை வெளியிடக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கருப்பர் நகரம்’. கோபி நயினாரின் கதைக்களம் மற்றும் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தை, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே படத்தின் தயாரிப்பாளரான கே.கங்காதரன், மற்றொரு தயாரிப்பாளரான ஆர்.ரமேஷ் என்பவருக்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது.
தன்னிடம் தடையில்லா சான்று பெறாமலும், தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்காமலும் புதிய தயாரிப்பாளரான ஆர்.ரமேஷ் அப்படத்தின் தொடர்ச்சியை வேறு ஒரு இயக்குநரை வைத்து படமாக்கியதாக கோபி நயினார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் ‘கருப்பர் நகரம்’ படத்தை வெளியிடக்கூடாது என தடை கோரி கோபி நயினார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியுடன் தனது கதையை வைத்து படமாக்கியுள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, அக்.27 வரை இப்படத்தை வெளியிடக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும்
இந்த வழக்கில் படத்தயாரிப்பாளர் ஆர்.ரமேஷ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.27-க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.