

சென்னை: மாவட்ட நீதிபதி, சிவில் நீதிபதி நேரடி நியமனங்களுக்கான தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட நீதிபதிகள் நேரடி நியமனம் உயர் நீதிமன்றம் வாயிலாகவும் சிவில் நீதிபதிகள் நேரடி நியமனம் டிஎன்பிஎஸ்சி வாயிலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவினரும் பெற வேண்டிய குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்நிலை, மெயின் தேர்வுகளில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பிசி, எம்பிசி, டிசி வகுப்பினருக்கான மதிப்பெண் 35 சதவீதமாகவும், பொதுப்பிரிவினருக்கான மதிப்பெண் குறைந்பட்சம் 40 சதவீதமாகவும் உள்ளது. அதேநேரம் மாற்றுத் திறனாளிகளுக்கென குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்நிலையில், மாவட்ட நீதிபதி, சிவில் நீதிபதி நேரடி நியமனங்களுக்கான தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது முதல்நிலைத் தேர்வு மற்றும் மெயின் தேர்வுக்கும் பொருந்தும்.
இதற்கேற்ப தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணிகள் (பணியமைப்பு மற்றும் ஆட்சேர்ப்பு) விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை செயலர் வெளியிட்டுள்ளார்.
எனவே, மாவட்ட நீதிபதி, சிவில் நீதிபதி பதவிகளுக்கான நேரடி நியமனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதால் விரைவில் அப்பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.