

சினிமாத்துறையில் ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சிகளுள் ஒன்று அக-கேமரா காட்சிப் புனைவு (In-Camera Visual Effects). படத்தின் இறுதிக்கட்டத்தில் கணினியில் காட்சிப் புனைவுகளைச் சேர்ப்பதற்குப் பதிலாக, ஒளிப்பதிவுக் கருவி படம்பிடிக்கும் நேரத்திலேயே மெய்நிகர் உலகத்தை ஒளி உமிழ் திரையில் (எல்.இ.டி திரை) உருவாக்கி நேரடியாகப் பதிவு செய்வதே இதன் அடிப்படைத் தத்துவமாகும்.
இதில் மிக முக்கியமான அறிவியல் கோட்பாடு ‘பார்வைக்கோண மாற்றம்’ (பாரலாக்ஸ்) விளைவு. நாம் மகிழ்வுந்திலோ தொடர்வண்டியிலோ பயணிக்கும்போது, அருகில் இருக்கும் மரங்கள் வேகமாகப் பின்னோக்கிச் செல்வதையும், தொலைவில் இருக்கும் மலைகள் மெதுவாக நகர்வதையும் காண்கிறோம். இதே ஆழமான பார்வைக் கோணத்தை மெய்நிகர் படப்பிடிப்பிலும் உருவாக்குவது அவசியம்.
படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவுக் கருவி இடப்புறமாக நகரும்போது, ஒளித்திரையில் தெரியும் முப்பரிமாண மெய்நிகர் உலகமும் ஒளிப்பதிவுக் கருவியின் இயக்கம், வேகம் மற்றும் கோணத்திற்கு ஏற்ப மாற வேண்டும். ஒளிப்பதிவுக் கருவி பின்தொடர்தல் (கேமரா டிராக்கிங்) தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகிறது.
ஒளிப்பதிவுக் கருவியின் இயக்கத்தைத் துல்லியமாகக் கணித்து, அன்ரியல் எஞ்சின் போன்ற நிகழ்நேரக் கணினி இயங்குதளத்தின் உதவியுடன் பின்னணியை உடனுக்குடன் மாற்றுவதன் மூலம், ஒளித்திரை ஒரு சாதாரணத் திரையாக இல்லாமல் நிஜ உலகத்தைப் போன்ற ஆழமான அனுபவத்தை உருவாக்குகிறது.
காட்சிக்குள் உண்மையும் மெய்நிகரும்: ஒரு தொல்லியல் அகழ்வாராய்ச்சித் தளத்தை எடுத்துக்கொள்வோம். நடிகர் நிற்கும் தரை, அருகிலுள்ள பழமையான கல்சுவர், அவரது கையில் இருக்கும் பண்டைய பொருள் போன்றவை உண்மையான நிஜக் களப் பொருட்களாக இருக்கலாம். ஆனால் அவருக்குப் பின்னால் விரிந்து கிடக்கும் நகரம், தொலைவில் தெரியும் அரண்மனை, வானம், மலைகள் மற்றும் நகரும் மேகங்கள் போன்றவை பிரம்மாண்ட ஒளித்திரை வளைவில் (எல்.இ.டி வால்யூம்) முப்பரிமாண மெய்நிகராக உருவாக்கப்படலாம்.
ஒளிப்பதிவுக் கருவியின் வில்லை (லென்ஸ்) வழியாகப் பார்க்கும்போது, நிஜ உலகப் பொருட்களும் மெய்நிகர் உலகமும் ஒரே காட்சிக்குள் இயல்பாக இணைந்துவிடுகின்றன. நடிகர்கள் தாங்கள் எந்தச் சூழலில் நடிக்கிறார்கள் என்பதை நேரடியாகப் பார்த்து உணர்ந்து நடிக்க முடிகிறது. அதே நேரத்தில் ஒளிப்பதிவாளர் இறுதிக் காட்சியின் தோற்றம், ஒளி மற்றும் நிறத்தைப் படப்பிடிப்புத் தளத்திலேயே சரிபார்க்க முடிகிறது.
பின்னணித் திரையிடல் முதல் விர்ச்சுவல் புரொடக் ஷன் வரை சினிமாப் பயணம்: சினிமாவின் அடிப்படை நோக்கம் ஒன்றே — பார்வையாளரை ஒரு கற்பனை உலகத்துக்குள் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்வது. ஆரம்ப காலத்தில் பின்புற ஒளியூடுருவல் திரை மூலம் பின்னணிக் காட்சிகள் உருவாக்கப்பட்டன. பின்னர் கணினிக் காட்சிப் புனைவுத் தொழில்நுட்பங்கள் வளர்ந்து, கணினி மூலம் இல்லாத உலகங்களையே உருவாக்க முடிந்தது.
இன்றைய விர்ச்சுவல் புரொடக் ஷன் காலத்தில், அந்த மெய்நிகர் உலகமே படப்பிடிப்புத் தளத்துக்குள் நேரடியாக வந்து நிற்கிறது. இதனால் சினிமா உருவாக்கத்தின் முறை மட்டுமல்ல, இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் பணிச்சூழலும் மாறியுள்ளது.
விர்ச்சுவல் புரொடக் ஷனின் செலவும் திறனான தயாரிப்புமுறையும்: விர்ச்சுவல் புரொடக் ஷன் பல நன்மைகளை வழங்கினாலும், இது எளிமையான அல்லது மலிவான தொழில்நுட்பம் அல்ல. ஒளிப்பதிவுக் கருவி பின்தொடர்தல் சாதனங்கள், உயர்தர ஒளித்திரை வளைவு, அதிவேகக் கணினிகள், அன்ரியல் எஞ்சின் கலைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பக் குழுக்கள் என அதிக முதலீடு தேவைப்படுகிறது. அதனால் முன் தயாரிப்புக் கட்டத்திலேயே முறையான திட்டமிடல் மிக முக்கியமான தாகிறது.
ஒரு திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளையும் விர்ச்சுவல் புரொடக் ஷன் முறையில் படமாக்குவது அவசியமில்லை. ஒரு காட்சிக்கு நிஜ களப் படப்பிடிப்பு, பாரம்பரியக் கணினிப் புனைவு அல்லது ஒளித்திரை அரங்கம் என எந்தத் தொழில்நுட்பம் காட்சியின் தேவைக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் ஏற்றது என்பதைத் தீர்மானிப்பதே திறனான தயாரிப்பு முறை ஆகும்.
புதிய தலைமுறை ஒளிப்பதிவும் நடைமுறைப் பயிற்சியும்: இந்தியத் திரையுலகில் விர்ச்சுவல் புரொடக் ஷன் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இதை வெறும் கோட்பாடாக இல்லாமல் நடைமுறையில் கற்றுக்கொள்வது அவசியம். சென்னையில் உள்ள சினிமா ஃபேக்டரி அகாடமியில் (Cinema Factory Academy) பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தலைமையில் விர்ச்சுவல் புரொடக் ஷன் குறித்த நடைமுறைப் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் ஒளித்திரை, ஒளிப்பதிவுக் கருவி பின்தொடர்தல், அன்ரியல் எஞ்சின், முப்பரிமாணச் சூழல், சுற்றுப்புற ஒளி, முதன்மை ஒளி, நிற மேலாண்மை மற்றும் ஒளிப்பதிவுக் கருவி ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்களை நடைமுறையில் கற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் பாரம்பரிய ஒளிப்பதிவுக் கருவி, வில்லை, ஒளியமைப்பு அறிவுடன் முப்பரிமாண உலக உருவாக்கத்தையும் ஒருங்கிணைக்கக் கூடிய புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர்கள் உருவாகின்றனர்.
விர்ச்சுவல் புரொடக் ஷனின் பின்னணியில் இயங்கும் தொழில்நுட்பக் குழு: ஒரு ஒளித்திரை அரங்கம் நிறுவப்பட்டாலே விர்ச்சுவல் புரொடக் ஷன் நிறைவடைந்து விடாது. அதன் பின்னணியில் பல நிபுணர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
விர்ச்சுவல் புரொடக் ஷன் மேற்பார்வையாளர் மற்றும் தயாரிப்பாளர்: முழுமையான விர்ச்சுவல் புரொடக் ஷன் பணிகள், நிதி ஒதுக்கீடு மற்றும் கால அட்டவணையை ஒருங்கிணைப்பவர்கள்.
மெய்நிகர் கலைப் பிரிவு மற்றும் முப்பரிமாணக் கலைஞர்கள்: இயக்குநரின் கற்பனையை முப்பரிமாண உலகமாக மாற்றுபவர்கள்.
அன்ரியல் எஞ்சின் / அக-கேமரா காட்சிப் புனைவு இயக்குநர்: மெய்நிகர் சூழலை நிகழ்நேரத்தில் கட்டுப்படுத்துபவர்கள்.
பின்தொடர்தல் மற்றும் ஒளித்திரை தொழில்நுட்ப வல்லுநர்கள்: ஒளிப்பதிவுக் கருவி பின்தொடர்தல் மற்றும் ஒளித்திரை நிறச் சீரமைப்பு போன்றவற்றை நிர்வகிப்பவர்கள்.
திரைப்படங்களைத் தாண்டி விர்ச்சுவல் புரொடக் ஷன்: விர்ச்சுவல் புரொடக் ஷனின் பயன்பாடு சினிமாவையும் தாண்டி விரிவடைந்து வருகிறது. மருத்துவத் துறையில் உடற்கூறியல் காட்சிப்படுத்தல் மற்றும் மாதிரிப் பயிற்சி, வாகனத் துறையில் மெய்நிகர் மாதிரி உருவாக்கம், கணினி விளையாட்டுகளில் நிகழ்நேர முப்பரிமாண உலகங்கள், கட்டிடக்கலை மற்றும் மனை வணிகத்தில் மெய்நிகர் உலாக்காட்சிகள், கல்வியில் மெய்நிகர் ஆய்வகங்கள், விளம்பரப் படப்பிடிப்பில் பல்வேறு உலகங்களை ஒரே இடத்தில் உருவாக்குதல், நேரலை நிகழ்வுகள் மற்றும் ஒளிபரப்புத் துறையில் நிகழ்நேர வரைபடங்கள் என பல துறைகளில் இது புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
விர்ச்சுவல் புரொடக் ஷன் என்பது வெறும் புதிய கணினிப் புனைவுத் தொழில்நுட்பம் அல்ல; அது சினிமாவையும் காட்சி ஊடகங்களையும் உருவாக்கும் முறையில் ஏற்பட்டுள்ள புதிய சிந்தனை. ஒளிப்பதிவுக் கருவி நகரும்போது உலகமும் நகர வேண்டும்; ஒளி மாறும்போது மெய்நிகர் உலகமும் அதற்கேற்ப பதிலளிக்க வேண்டும்; நடிகர் நடிக்கும்போது அவர் கற்பனை செய்ய வேண்டிய உலகம் அவருடைய கண்முன்னே இருக்க வேண்டும்.
எதிர்கால ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவுக் கருவியையும் வில்லியையும் மட்டும் அறிந்தவராக இருக்க முடியாது. ஒளி, வில்லை, ஒளிப்பதிவுக் கருவி, நிறம், முப்பரிமாண உலகம், நிகழ்நேரக் கணினி இயங்குதளம், பின்தொடர்தல் மற்றும் மெய்நிகர்க் கலை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து காட்சியை உருவாக்கக்கூடிய காட்சி வழிக் கதையாசிரியராக மாற வேண்டும்.
அதுவே விர்ச்சுவல் புரொடக் ஷன் தரும் மிகப்பெரிய மாற்றம் — நாம் உலகத்தை ஒளிப்பதிவுக் கருவிக்கு முன் தேடிச் செல்லவேண்டியதில்லை; தேவையான உலகத்தை ஒளிப்பதிவுக் கருவியின் முன்பே உருவாக்க முடியும்.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)