

பாலைவனத்தில் நிற்கும் நடிகருக்குப் பின்னால் முடிவில்லாமல் மணல் பரந்திருக்கிறது. தொலைவில் மலைகளுக்குப் பின்னே சூரியன் மறையத் தொடங்குகிறது. ஆனால் நடிகர் உண்மையான பாலைவனத்தில் அல்ல; அவர் ஒரு ஸ்டூடியோவுக்குள் நிற்கிறார். பின்னணியில் இருப்பவை ஒரு மிகப்பெரிய எல்இடி சுவரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் விர்ச்சுவல் புரொடக் ஷன் (Virtual Production) என்னும் மெய்நிகர் தயாரிப்பு.
இது பெரிய திரையில் கேமரா, எல்இடி திரை, கணினியில் உருவாக்கப்பட்ட முப்பரிமாண உலகம், ஒளியமைப்பு, நடிகர்கள் ஆகிய அனைத்தும் ஒன்றாகச் செயல்படும் ஒரு புதிய படப்பிடிப்பு முறை. ஆனால், இதன் சிந்தனை முற்றிலும் புதிதல்ல. பல்லாண்டுகளுக்கு முன்பே திரைப்படங்களில் பேக் புரொஜெக் ஷன் பயன்படுத்தப்பட்டது. காருக்குள் நடிகர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் ஓடும் சாலையின் காட்சி திரையில் காட்டப்படும். நடிகர்கள் பயணம் செய்யாமல், கார் நகர்வது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.
பின்னர் வேறு பல புரொஜெக் ஷன் முறைகளும் க்ரீன் ஸ்க்ரீன் முறையும் வளர்ந்தன. இதில் நடிகருக்குப் பின்னால் பச்சைத் திரை வைக்கப்படுகிறது. பின்னர் அந்தப் பச்சை நீக்கப்பட்டு அங்கே வேறு உலகம் சேர்க்கப்படுகிறது. VP இந்தச் சிந்தனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. பின்னணியைப் பின்னர் சேர்ப்பதற்குப் பதிலாக, படப்பிடிப்பின்போதே அதனைக் கேமராவுக்கு முன் கொண்டு வருகிறது.
சில காட்சிகளை உண்மையான இடங்களில் படமாக்குவது மிகவும் கடினம். பாலைவனத்தில் படமாக்க வேண்டுமானால் கடுமையான வெப்பம், தூசு, காற்று, குழுவினரின் போக்குவரத்து, கருவிகளைப் பாதுகாப்பது போன்ற சவால்கள் இருக்கும். கடலில் அல்லது கடற்கரையில் அலைகள், சூரிய ஒளி, காற்று, நீரின் நிறம், பிரதிபலிப்பு ஆகியவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.
அரண்மனை, அழிந்துபோன நகரம் அல்லது பாதுகாக்கப்படும் தொல்லியல் தளம் போன்ற இடங்களில் பெரிய படக்குழுவுடன் படப்பிடிப்பு நடத்துவதற்கும் பல கட்டுப்பாடுகள் இருக்கும். அனுமதி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் அந்த இடங்களில் நீண்ட நேரம் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போகலாம்.
இத்தகைய சூழல்களில் VP ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது. பாலைவனம், கடல் அல்லது தொல்லியல் உலகம் போன்றவற்றை முப்பரிமாணமாக உருவாக்கி எல்இடி சுவரில் காட்டப்படும். நடிகர் அந்த உலகத்தைப் பார்க்கிறார். அதன் நிறமும் ஒளியும் அவர்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கேமரா நகரும்போது காட்சியின் கண்ணோட்டமும் மாறுகிறது. இதனால் நடிகரும் பின்னணியும் ஒரே உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கிறது.
திரைப்படப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் எல்இடி சுவரும் வணிக எல்இடி திரையும் ஒன்றல்ல. திருமணங் கள், இசை நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், மாநாடு கள், கடைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கமர்ஷியல் எல்இடி டிஸ்ப்ளேக்கள் நாம் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டவை.
திரைப்படப் படப்பிடிப்பில் எல்இடி சுவரை கேமரா நேரடியாகப் படமாக்குகிறது. எனவே அதன் பிக்சல் அமைப்பு, ரிஃப்ரெஷ் ரேட், ஷட்டருடன் ஒத்திசைவு, நிறத் துல்லியம், ஒளிர்வு,பார்வைக் கோணம், ஸ்கேன் பிஹேவியர் போன்றவை முக்கியமாகின்றன.
சாதாரண எல்இடி திரையை கேமராவில் படமாக்கும்போது ஃபிளிக்கர், ஸ்கேன் லைன்ஸ், திரையில் பிக்சல்கள் தெரிவது பேண்டிங் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் கமர்ஷியல் எல்இடி திரைகள் அதிகமாக ஒளிரக்கூடும். அதனால். VP-க்கு திரைப்படப் படப்பிடிப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்இடி சிஸ்டம் தேவை.
எல்இடி பிட்ச் என்றால் என்ன? - எல்இடி சுவர் பற்றிப் பேசும்போது பிக்சல் பிட்ச் என்ற சொல்லை அறிந்துகொள்ள வேண்டும். எல்இடி திரையில் இருக்கும் இரண்டு பிக்சல்களின் மையங்களுக்கு இடையிலான தூரமே இது. உதாரணமாக, 2.6 எம்எம் பிட்ச் என்றால் இரண்டு பிக்சல்களுக்கு இடையிலான தூரம், சுமார் 2.6 மில்லிமீட்டர். பிட்ச் குறைந்தால் பிக்சல் நெருக்கமாக இருக்கும். இதனால் கேமரா எல்இடி சுவருக்கு அருகில் சென்றாலும் பிக்சல் அமைப்பு குறைவாகத் தெரியும்.
கேமராவின் தூரம், பயன்படுத்தப்படும் லென்ஸ், காட்சியின் அளவு மற்றும் படப்பிடிப்பின் தேவையைப் பொறுத்தே எல்இடி தேர்வு செய்யப்பட வேண்டும். பிட்ச் குறைந்தால் செலவும் அதிகரிக்கும்.
எல்இடி சுவர் மட்டும் போதுமா? - இல்லை. ஒரு VPஅரங்கில் எல்இடி சுவர் இருந்தால் மட்டுமே மெய்நிகர் உலகம் உருவாகாது. அது டிஜிட்டல் உலகை நடிகருக்கும் கேமராவுக்கும் காட்டுகிறது.
எல்இடி ப்ராஸஸர்– கணினியிலிருந்து வரும் காட்சித் தகவலை எல்இடி திரை சரியாகக் காட்டும் வகையில் செயலாக்குகிறது.
ரெண்டரிங் கம்ப்யூட்டர்– முப்பரிமாண உலகத்தை நிகழ்நேரத்தில் உருவாக்குகிறது. அன்ரியல் எஞ்சின் – அந்த உலகத்தை உருவாக்கவும், ஒளியமைக்கவும், இயக்கவும் பயன்படுத்தப்படும் முக்கியமான மென்பொருள்.
கேமரா ட்ரேக்கிங்– கேமரா எங்கு இருக்கிறது, எந்த திசையில் பார்க்கிறது, எவ்வாறு நகர்கிறது என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கிறது.
லென்ஸ் டேட்டா– லென்ஸின் குவிய நீளம், ஃபோகஸ் போன்ற தகவல்களை கணினி உலகத்துடன் இணைக்க உதவுகிறது.
ஜென்லாக் மற்றும் டைம்கோட் – கேமரா,எல்இடி சுவர், ரெண்டரிங் சிஸ்டம் போன்றவை ஒரே நேரத்தில் துல்லியமாக இயங்க உதவும் ஒத்திசைவு முறைகள்.
இவை அனைத்தும் ஒன்றாகச் செயல்பட்டால்தான் எல்இடி சுவர் திரையிலிருந்து ஓர் உலகமாக மாறுகிறது.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)