

பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற ‘தேன்’ படத்துக்குப் பிறகு கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் திரைப்படம், ‘அருள்வான்’. அருள்நிதி, ரம்யா பாண்டியன், ஆரவ், விடிவி கணேஷ், பேபி கிருத்திகா, காளி வெங்கட், சரவணன், ஹரீஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரித்திருக்கிறார். சுபா சரவணன் இணை தயாரிப்பு செய்துள்ள இப்படம் வரும் 17-ல் வெளியாகிறது. இப்படம் பற்றி இயக்குநர் கணேஷ் விநாயக்கிடம் பேசினோம்.
உண்மைச் சம்பவக் கதைன்னு சொன்னாங்களே?
ஆமா. நான் இயக்கிய ‘தேன்’ படத்தைப் பார்த்துட்டு, தயாரிப்பாளர் எஸ்.ஜி.சரவணன் சார் பேசினார், ‘தேன்’ ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னார். அப்படியே, சேர்ந்து படம் பண்ணலாம்னு சொன்னார். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தப் படம். மேற்கு தொடர்ச்சி மலையில இருக்கிற ஒரு கிராமத்துல, கல்வி பயில வாய்ப்பில்லாத ஒரு சிறுமிக்கு படிச்சே ஆகணுங்கற கட்டா யம் ஏற்படுது. இதுல அவள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, அவளோட லட்சியத்தை அடைய முடிஞ்சுதா?ங்கறதை உணர்வுப் பூர்வமாகச் சொல்ற படம் இது.
அருள்நிதியோட உங்களுக்கு இது 2-வது படம்...
ஏற்கெனவே ‘தகராறு’ பண்ணியிருக்கிறதால அவரோட நட்பு இருந்தது. அடுத்தும் நல்ல கதை இருந்தா சொல்லுங்கன்னு சொல்லியிருந்தார். அப்பதான், இந்தப் படத்தோட கதையை சொன்னேன். ‘கல்விங்கறது எல்லாருக்கும் போய் சேரணும்’ அப்படிங்கற பாயின்ட்டுதான் இந்தப் படத்தோட விஷயம். இதை சொன்னதும் ‘இது மாதிரியான ஒரு கதையை நாம சொல்லாம, வேற யார் சொல்லப் போறா?’ன்னு சொன்னார்.
முழுக்கதையை கேட்டதும் நடிக்கிறேன்னு சொன்னார். இதுல முத்துவேல் என்கிற மாவட்ட ஆட்சித் தலைவராக அவர் நடிச்சிருக்கார். படத்துக்கு முதல்ல ‘வான்’ அப்படிங்கற தலைப்பைதான் வச்சோம். அது எங்களுக்கு கிடைக்காததால ‘அருள்வான்’னு வச்சிருக்கோம்.
கல்விக்காகப் போராடுற சிறுமியா யார் நடிச்சிருக்காங்க?
சின்னத்திரை தொடர்கள்ல நடிச்சிருக்கிற கிருத்திகா பண்ணியிருக்காங்க. ஒரு தொடர்ல அவங்களோட நடிப்பைப் பார்த்துட்டு இந்த கேரக்டருக்கு பொருந்து வாங்கன்னு ஆடிஷன் பண்ணினோம். பிரம் மாதமா நடிச்சாங்க. அதனால அவங்களையே நடிக்க வச்சோம். பெருமைக்காகச் சொல்லலை, படம் வெளியான பிறகு அவங்களுக்குகண்டிப்பா தேசிய விருது கிடைக்கும்.
‘தேன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் மலைப்பிரதேசக் கதையை இயக்கி இருக்கீங்களே?
அது இயல்பா அமைஞ்சதுதான். ‘தேன்’ மலைப்பகுதி கதை. அந்தக் கதையை அங்கதான் பண்ண முடியும். இந்தப் படமும், எதேச்சையா அப்படியே அமைஞ்சிருச்சு. குரங்கனி மலைப் பகுதியில நடக்கிற கதை. அதனால, அங்க ஷுட் பண்ணினோம். ஹீரோ அருள்நிதிதான், ஆனா அவருக்கு ஜோடி கிடையாது. கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிச்சிருக்காங்க. அவங்க கணவரா ஆரவ் பண்ணியிருக்கார். இவங்களோட மகளா கிருத்திகா நடிச்சிருக்காங்க. இவங்களை சுற்றி நடக்கிற கதைதான் படம்.
மலைப்பகுதியில ஷூட் பண்றது கஷ்டம்னு சொல்வாங்களே?
கஷ்டம்தான். லைட்டிங் பெரிய பிரச்சினை. காத்திருக்கணும். அப்புறம் அடிக்கடி கீழ இறங்க முடியாதுங்கறதால, மலைமேல பல கிலோ மீட்டர் நடந்துபோய், அங்கேயே டென்ட் அடிச்சு தங்கினோம். ஆரவ், ரம்யா பாண்டியன் எல்லோரும் அதுல தங்கிதான் நடிச்சாங்க. அங்க 35 நாட்கள் ஷூட் பண்ணினோம். படத்தோட சில பகுதியில மலைவாழ் மக்கள் பேசற, காடர் மொழியை பயன்படுத்தி இருக்கோம். உணர்வுபூர்வமான, சமூக முரண்களை சொல்ற படமா இருக்கும்.
மற்ற டெக்னீஷியன்கள்?
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைச்சிருக்கார். பாடல்களும் பின்னணி இசையும் ரொம்ப அருமையா வந்திருக்கு. வசனம், பாடல்களை யுகபாரதி எழுதி யிருக்கிறார். சுகுமாரோட ஒளிப்பதிவுல மலைப்பகுதியோட குளிர்ச்சியையும் பசுமையையும் நீங்க உணர முடியும்.