

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ மூலம் முழுநேர நடிகராகி இருக்கிறார் இயக்குநர் கஸ்தூரி ராஜா. வாழ்வின் பல்வேறு இக்கட்டுகளைச் சந்தித்து நிற்கிற யூசுப் என்கிற தென்மாவட்ட இஸ்லாமிய குடும்பத் தலைவராக அந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார் அவர். இயக்குநராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக அறியப்பட்ட அவருக்கு நடிப்பு புதிது.
எப்படி தோன்றியது நடிப்பு ஆர்வம்?
ஆரம்பத்துல எனக்கு நடிக்கிறதுல அதிக ஆர்வமில்லை. நான் இயக்குநரா இருந்தப்ப, எல்லோருக்கும் நடிப்புச் சொல்லிக் கொடுக்கும் போது, “இதுக்கு பேசாம நாமளே நடிச்சிரலாம்”னு தோணிருக்கு. அது ஒரு கோபத்துல நினைச்சதா இருந்திருக்கே தவிர, நடிகனாகவே களமிறங்கணும்னு நினைச்ச தில்ல. சண்முக பாண்டியனோட அப்பாவா ‘படைவீரன்’ல நடிச்சேன்.
அப்புறம் இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ ஸ்கிரிப்ட்டை கொடுத்து வாசிக்கச் சொன்னார். “உங்களுக்கு பிடிச்சிருந்தா பண்ணுங்க” ன்னார். அந்தப் படத்துல என்னோட கதாபாத்திரத்துல ஆழமான, மனசைத் தைக்கிற வாழ்க்கை இருந்ததை பார்த்தேன். ஏற்ற இறக்கங்கள் கொண்ட ஒரு மனுஷனோட முழுமையான வாழ்க்கை பிடிச்சிருந்தது. சரி, பண்ணிப்பார்த்தா என்னன்னு தோணுச்சு. நடிக்கிறேன்னு சொல்லிட்டேன்.
இயக்குநரா படப்பிடிப்புல இருந்ததற்கும் நடிகரா ஸ்பாட்ல இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம் தெரியுது?
இயக்குநர் அப்படிங்கும்போது ஆசிரியனா இருந்திருப்பேன். நடிகனா, அப்படி உணர முடியாது. ‘ஹபீபி’ படத்துல என்னோட நடிச்சவங்க எல்லாருமே புதுமுகங்கள் அப்படிங்கறதால, நடிக்கறதுக்கும் பழகறதுக்கும் எனக்கு ரொம்ப எளிமையா இருந்தது. மற்றபடி வித்தியாசமா எதுவும் தெரியலை. இயக்குநர் உள்பட எல்லோருமே என்னை ஒரு தந்தை மாதிரியே படப்பிடிப்புல நடத்தியதால கடினமா இல்லை. ஆனா, அந்த கேரக்டர் கடினமானதுன்னு இப்ப எல்லோரும் சொல்றாங்க.
எனக்கு நம்ப முடியல. இதுக்கு மேலயும் என்னால பண்ண முடியும் அப்படிங்கற நம்பிக்கை வந்திருக்கு. பட புரமோஷனுக்காக நிறைய ஊர்களுக்கு போயிட்டு வந்தோம். இஸ்லாமிய மக்கள் எல்லோரும் கொண்டாடுறாங்க. கையை பிடிச்சுக்கிட்டு அழறாங்க. இந்த முகத்துல அப்படி என்ன கண்டுபிடிச்சாங்கன்னு எனக்குத் தெரியல. சினிமா துறையிலயும் நிறைய பேர் படம் பார்த்துட்டுப் பாராட்டினாங்க. அவங்க பாராட்டும்போது நமக்குள்ள ஒரு போதை ஏறுது.
என்னை எழுத்தாளனா மாத்தியது இயக்குநர் விசு சார். என்னை இயக்குநரா அறிமுகப்படுத்தி மறுபிறப்பைக் கொடுத்தவர் ராஜ்கிரண். என்னை முழுமையான நடிகனா மாற்றி இருக்கிறவர் மீரா கதிரவன். இந்த வயசுல எனக்கு இப்படியொரு வாய்ப்பு வர்றது வரப்பிரசாதம்தான். அதைக் கொடுத்த மீரா கதிரவனுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன்.
இனி தொடர்ந்து நடிப்புதானா?
வேற என்ன பண்றது? இயக்குநரா, சினிமாவுல என்னை நம்பி பணம் போட்டவங்க யாரும் நஷ்டமடைஞ்சதில்லை. இப்பவும் அப்படி படம் இயக்க ஆர்வம் இருக்கு. என்ன இருந்தாலும் இயக்குநர்ங்கறது கர்ணனுக்கு கவசக் குண்டலம் மாதிரி என்னோடவே பிறந்தது. நடிப்பு இடையில வந்ததுன்னாலும் அது பெரிய ஈர்ப்பை கொடுத்திருக்கு. நடிப்பை தொடர்வேன். எந்த கதையா இருந்தாலும் அதுல ஒரு சவால் இருக்கணும்னு நினைக்கிறேன்.
ஒரு நாள், இரண்டு நாள் வேலைன்னாலும் அதுல என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கணும். அப்படி இருந்தா பண்ணுவேன். அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிற ‘டிசி’ படத்துல லோகேஷ் கனகராஜுக்கு அப்பாவா நடிச்சிருக்கேன். அதுல 4 நாள் வேலை தான். ஆனா, சேலஞ்சிங்கா இருந்தது. அடுத்து சசிகுமாருக்கு அப்பாவா, ‘எவிடென்ஸ்’ படத்துல நடிச்சிருக்கேன். நல்ல வேடங்களை எதிர்பார்க்கிறேன். நெகட்டிவ் கதாபாத்திரத்தை விரும்பறேன்.
உங்க மகன்கள் செல்வராகவன், தனுஷ் இரண்டு பேருமே நடிகரா, இயக்குநரா நல்ல இடத்துல இருக்காங்க. நீங்களும் அவங்க இடத்துக்கு வந்திருக்கீங்க...
மகிழ்ச்சிதான். அவங்க ‘ஹபீபி’ பார்த்துட்டு நல்லா பண்ணியிருக்கீங்கப்பான்னு சொன்னது பெரிய விஷயம். உலகம் பூரா படம் பார்த்தாங்க, நான் பயப்படலை. என் மகன்கள் படம் பார்க்கிறாங்க அப்படின்னதும் பயந்துட்டேன். ஆனா, அவங்க நல்லா பண்ணியிருக்கிறதா சொன்னது மகிழ்ச்சியா இருக்கு. எங்கப்பா என்னை ஆசிர்வாதம் பண்ணின மாதிரி, என் பிள்ளைகள் எனக்கு ஆசிர்வாதம் பண்ணினாங்க.
உங்க பேரன் பவீஷ் நாராயணனும் ஹீரோவாகி இருக்கிறார். உங்க குடும்பத்துல நிறைய பேர் சினிமாவுக்கு வந்துட்டாங்க...
இறைவனோட ஆசிர்வாதம்தான். அது இல்லாம இங்க எதுவுமே நடக்காது. ஊர்ல இருந்து வந்து சென்னையில நான் கால் வைக்கும் போது தனியாள். என் கையில காசே இல்லாம வந்து இறங்கினேன். சினிமாவுக்கு முயற்சியே பண்ணல. ஆனா, சினிமா தனக்கு வேண்டிய ஆட்களை அதுவே தேர்ந்தெடுத்துக்கும் போலிருக்கு. அந்த மாதிரி என்னை விடாம துரத்தி துரத்தி இழுத்துட்டு வந்தது. ஒரு கட்டத்துல சினிமாவோட தூண்டில்ல அகப்பட்டுட்டேன். சினிமா என்னைப் பக்குவப்படுத்தி படங்கள் இயக்க வச்சிருக்கு. ஒரு 25 படங்கள் பண்ணியிருக்கேன்.
தரமான படங்கள்னு சொல்ற மாதிரிதான் என் படங்கள் இருக்கும். அடுத்து என் மகன்கள் சினிமாவுக்கு வந்தாங்க. இப்ப பேரப்பிள்ளைகள் வந்தாங்கன்னா அது அதிர்ஷ்டம்தான். பாரதிராஜா சார் சொல்வார், “நீ கடவுளால ரொம்பவும் ஆசிர்வதிக்கப் பட்டவன்யா”ன்னு. இப்ப பவிஷ் வந்திருக்கார். அடுத்து யாத்ரா வருவார்... என் குடும்பத்துல இருந்து இன்னும் அஞ்சாறு பேர் வருவாங்க. சினிமாதான் நிரந்தரம்னு ஆனப்பிறகு என்ன பண்ண முடியும்? சினிமா மூலமா மக்கள் மனசுல நிறைஞ்சிருக்கிறது பெரிய விஷயம்.
நீங்க சிறந்த பாடலாசிரியர் கூட. ‘தூதுவளை இலை அரைச்சி’, ‘கூவுற குயிலு சேவலை பார்த்து’, ‘பஞ்சுமிட்டாய் சேலை கட்டி’ன்னு உங்களோட பல பாடல்கள் இப்பவும் டிரெண்டிங்ல இருக்கு...
ஆமா. அந்தப் பாடல்களை எழுதியது நான்தான்னு யாருக்கும் தெரியல. அந்த காலத்துலயே என்னை நான் விளம்பரப்படுத்திக்கலை. கிராமத்துல இருந்து வந்ததால என்னை மார்க்கெட்டிங் பண்ண எனக்குத் தெரியல. இன்னைக்கு மீரா கதிரவன் கூட ‘ஹபீபி’ புரமோஷனுக்கு போகும்போது மார்க்கெட்டிங் விஷயங்களை பார்த்து எனக்கு எதுவுமே புரியல. எங்க காலத்துல அப்படி இல்லையே. அன்னைக்கு இருந்த மக்களும் அவங்களோட ரசனையுமே வேற. அவங்க ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள இருந்தாங்க. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கான்னு பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. அதனால அந்த மாதிரியான பாடல்களை ரசிச்சாங்க. இன்னைக்கு அது தேவைப்படலை.
இன்றைக்கு வருகிற பாடல்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க? உங்க வீட்டுலயே ஒரு ‘பொயட்டு’ (தனுஷ்) இருக்காரே?
காலத்துக்கு தகுந்த மாதிரி இன்றைய பாடலாசிரியர்கள் எழுதறாங்க. பழைய மாதிரி கதைக்குத் தேவையானது, ரசிகர்களுக்குத் தேவையான மாதிரி எழுதறத விட்டுட்டு, இசைக்கான சந்தத்துக்காகத்தான் எழுதறாங்க. அதுக்குள்ள ஏதாவது விஷயம் இருக்கணும்னு நினைக்கறதில்ல. நான் என்னோட ‘வீரத்தாலாட்டு’ படத்துல, “வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு வாக்கப்பட்டு வாரமுண்டு வாக்குச் சொல்லிப் போனவளே நாகரத்தினமே”ங்கற பாடலை எழுதினேன்.
இந்தப் பாடலை இளையராஜாகிட்ட பாடியே கொண்டு போய் கொடுத்ததும் அதை அப்படியே வச்சார். இன்னைக்கு அப்படி ரைமிங்கோட எழுதறதில்லை. தனுஷ் பாடல்கள் எழுதிட்டு எனக்குப் போட்டுக் காண்பிப்பார். நல்லாயிருக்கும். அவர் என் மகன் அப்படிங்கறதுக்காகச் சொல்லல. அவர்கிட்ட பாட்டு எழுதும் திறமை இயல்பாகவே இருக்கு. செல்வராகவனும் அருமையா பாடல்கள் எழுதுவார்.
அன்னைக்கு இருந்த சினிமாவிலயும் இன்றைக்கு இருக்கிற சினிமாவிலயும் என்ன மாற்றத்தைப் பார்க்கிறீங்க?
அன்னைக்கு எல்லாமே ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள இருந்தது. ஒரு கதைன்னா அதை எழுதி முடிச்சுட்டு, ஷூட்டிங் போறதுங்கற ஒழுங்கு இருந்தது. இன்னைக்கு வேகமான தொழிலா சினிமா மாறியிருக்கு. அது எங்க போயி இடிக்கும்னு தெரியாது. அந்த காலத்துல, தட்டி கீழே விழுந்தா கூட மறுபடியும் எழுந்திரிச்சிருவாங்க. அந்த கால இயக்குநர்களை எடுத்துகிட்டா, கே.பாலசந்தர் சார்லாம் 130 படங்கள் இயக்கி இருக்கார். ராமநாராயணன் 120 படம் எடுத்திருக்கார். இன்னைக்கு எடுக்க முடியுதா? 5, 6 படங்களுக்கு மேல தாண்டறதே கஷ்டமா இருக்கு. 25 படத்துக்கு மேல என்னாலயே தாண்ட முடியலையே! இதுதான் மாற்றம். மாற்றங்கள் தவிர்க்க முடியாததுதானே!
- செ.ஏக்நாத்ராஜ் | தொடர்புக்கு egnathraj.c@hindutamil.co.in