

“இந்திய செவ்வியல் இசையை நாம் கவனித்தால் அது பக்தியாகத்தான் இருக்கிறது. இசையின் அடிப்படையே பக்திதான்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ படத்தின் முதலாம் பாகம் நவம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக சென்னையில் புதன்கிழமை பாடல் வெளியீட்டு நிகழ்வு நடந்தது. அதில் படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், “என்னுடைய பள்ளி காலத்தில் இருந்து பார்த்த ராமாயண கதைகளை நினைத்து பார்க்கிறேன். அதன்பிறகு ஆர்.எஸ்.மனோகரனின் ராமாயணம், அடுத்து, லங்கேஸ்வரன், இப்போது நிதேஷ் திவாரியின் இந்த ‘ராமாயணம்’. இதை ஒரு கற்றல் பயணமாகத்தான் நான் கருதுகிறேன். ஒரு சிறந்த கதாபாத்திரம் தனது தாயிடம், தந்தையிடம், மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நமக்கு தொடர்ந்து கற்றுத் தருகிறது இல்லையா? நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கிறது. இது ஓர் அழகான விஷயம்தான்.
நான் உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2014-ல் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதில், உலகத்தில் உள்ள பலருக்கும் உத்வேகம் அளிக்கும் நீங்கள் ஒரு வெள்ளிக்கிழமை எனது கனவிலும் வந்தீர்கள். இது நிச்சயமாக நடக்கும் என நான் நம்புவதால், இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தத் துறையின் முன்னோடிகளுடன் இணைந்து, நீங்கள் ஒரு இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, நமது இதிகாசமான ராமாயணத்தை இசையாகக் கொண்டு இந்தியாவிலும், உலகெங்கிலுமொரு மாயாஜால தருணத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள்.
மாயாஜாலமான, மனதைக் கவரும் விதமான அந்த இசை நிகழ்ச்சி, இன்று உலகத்துக்கு தேவையான கடமை, அன்பு போன்ற அடிப்படை விழுமியங்களை பரப்புகிறது என இருந்தது. அதை அனுப்பியவர் நியூயார்க் சதீஷ். நேற்று அவர் அந்த கனவு நினைவிருக்கிறதா எனக் கேட்டார். நான் இன்று செய்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை 2014-ல் எப்படி மக்களால் கணித்திருக்க முடியும் என நான் திகைத்துப்போனேன்.
இந்திய இசையை நீங்கள் பார்த்தால், அது வட இந்தியா, தென்னிந்தியா என எந்த இசையாக இருந்தாலும் அது கிருஷ்ணர், ராமர் என பக்தியாக நிறைந்துள்ளது. அதை நாம் கீர்த்தனை, தும்ரி, பந்திஷ், வர்ணம் மூலமாக கற்றுக்கொள்கிறோம். இசையின் அடிப்படையே பக்திதான். அப்படியானால் இங்கே ஒரு இசையமைப்பாளருக்கு, ராமாயணத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டும் என சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை, சரிதானே?
இந்த உத்வேகத்தால், நமித் மல்ஹோத்ராவிடம் ஒரு சிறந்த குணம் இருந்தது. ஆழமாக வேரூன்றிய ஓர் இசை, மேற்கில் எடுபடுமா என சோதித்தறியும் திறன். அதனால் முதலில் உருவாக்கிய இசையை அவர் நிராகரித்து, அது எடுபடும் என எனக்கு தோன்றவில்லை என்றார்.
ஒரு மாதத்துக்கு பிறகு அவர் அந்த முதல் இசையையே வாசிக்கச் சொன்னார். அவருக்குள் பல விஷயங்கள் இருந்தன. இந்தப் படம் ஓர் ஒத்தையா ரெட்டையா விளையாட்டு போன்றது. அவரின் அழுத்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால் படத்தின் பாடல்களைக் கொடுக்க மூன்று ஆண்டுகள் ஆனது. அந்த செயல்முறைகளை நான் மிகவும் ரசித்தேன்.
எங்களிடம் ஒரு முழுமையான ஆல்பம் உள்ளது. படத்துக்கு இந்தியில் பாடல்கள் எழுதிய குமார் விஸ்வா, பக்தி இசை மற்றும் ராமாயணத்தில் கைதேர்ந்தவர். தமிழில் பாடல்கள் எழுதிய கார்த்திக் மற்றும் இளங்கோவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது” என ‘ராமாயணா’ பட இசைப் பயணத்தின் நினைவுகளை ரஹ்மான் பகிர்ந்துகொண்டார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில், ராமராக ரன்பீர் கபூரரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.