

ஆர்யா, இந்திரன்ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜினா, போஸ் வெங்கட், அஞ்சலி நாயர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘அனந்தன் காடு’.
ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு அஜனீஸ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் தயாரித்துள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் தமிழ், மலையாள மொழிகளில் உருவாகியுள்ளது.
இதன் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூன் 25-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் ஆர்யா கூறும்போது, “இது 2 வருடமாக நடைபெற்ற திரைப்படம். ‘எனிமி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, முரளி கோபி ஒரு ஒன்லைன் சொன்னதாகத் தயாரிப்பாளர் வினோத் என்னிடம் சொன்னார். அந்தக் கதையில் பல அடுக்குகள் இருந்தன. ‘லூசிபர்’ போன்ற படங்களில் நாம் அதைப் பார்த்திருக்கிறோம்.
அத்தகைய திரைக்கதையைத் திரையில் அதே தரத்தில் கொண்டு வருவது சவாலான விஷயம். இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் மற்றும் தயாரிப்பாளர் வினோத் எந்த சமரசமும் செய்யாமல், அந்த திரைக் கதையின் ஆழத்தையும் வலிமையையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். எனது கதாபாத்திரம் எமோஷனலாகவும், வலுவானதாகவும் இருந்ததால் ஒப்புக் கொண்டேன். அரசியல் பின்னணியில் உள்ள ஆக் ஷன் கதை இது. ஆனால், அரசியல் கதை இல்லை.
திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு, கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் நடைபெறும் கதை இது. எனவே படத்தில் தமிழ், மலையாள மொழிகள் இயல்பாக இடம்பெறும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞனாக நடித்திருக்கிறேன். டெக்னிக்கலாகவும் இந்தப் படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.