

சட்டப்பேரவையில் நேற்று மேகேதாட்டு அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய்.
சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேகேதாட்டு அணை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்.5-ம் தேதி அளித்த இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்.16-ம் தேதி அளித்த தீர்ப்பு ஆகியவற்றை மதிக்காமல், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதலையும், மத்திய அரசின் எந்தவித அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை ஏற்க முடியாது. கர்நாடக அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியையும் மத்திய அரசு அளிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப் படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.
இந்த விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. எனவே, மேகேதாட்டுவிலோ, காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றியும், மத்திய அரசின் அனுமதியின்றியும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகாவை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ, அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்கீழ் புதிய நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசியதாவது: அரசியல் கட்சிகளுக்குள் கொள்கை, நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களுக்கான பிரச்சினை என்றால், எல்லா கட்சிகளுமே மக்கள் பக்கம்தான் நிற்கும். நமது விவசாயிகள், மக்களுக்காக நிற்க வேண்டியது நமது கடமை. நதிநீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
அந்த உணர்வு அடிப்படையில், கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரும் யாரையும் குறை சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். நமது விவசாயிகள், தமிழக மக்களுக்காக கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தை ஒருமித்த கருத்துடன் அனைவரும் நிறைவேற்றித் தரவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேமுதிக, கொமதேக, மதிமுக, மமக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
உதயநிதியின் கோரிக்கை ஏற்பு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘மேகேதாட்டு அணை கட்டும் பிரச்சினை ஒரு புதிய விவாதம் என்பதால், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்படி, புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது எனும் திருத்தத்தை சேர்க்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு முதல்வர் விஜய், ‘‘மேகேதாட்டு பிரச்சினை குறித்து எனது தலைமையில் கடந்த மே 26-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனி நடுவர் மன்றம் அமைக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் அளித்த கருத்தை தனித் தீர்மானத்தில் கூடுதலாக சேர்க்கலாம்’’ என்றார். அதன்பிறகு, முதல்வர் முன்மொழிந்த திருத்தப்பட்ட தீர்மானம், பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் நன்றி தெரிவித்தார்.
நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்
முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, வீராசாமி, கண்ணன், ஆறுமுகம், சுவாமிநாதன், நாஞ்சில் முருகேசன் ஆகியோரது மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலர் சி.கு.ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் பிரபாகர் வாசித்து முடித்ததும், அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.