திரையில் செதுக்கப்படும் முகங்கள்: புரொஃபைல் ஷாட்களின் அழகியல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 28

திரையில் செதுக்கப்படும் முகங்கள்: புரொஃபைல் ஷாட்களின் அழகியல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 28
Updated on
3 min read

ஒளியின் வழியே சொல்லப்படும் சினிமாவில் ஒளிப்பதிவாளர் கேமராவின் கோணத்தை மாற்றும்போதெல்லாம், அந்தத் திரைக்கதையின் உணர்ச்சியும் மாறுகிறது. மனித முகத்தை அதன் முழு வடிவத்தில் காண்பதை விட, அதன் ஒரு பக்கத்தை மட்டும் காட்டும் ‘புரொஃபைல் ஷாட்’ விசித்திரமான ஈர்ப்பைக் கொண்டது.

இது கதாபாத்திரத்தின் அந்தரங்கத்தை, ரகசியத்தை அல்லது ஒரு மோதலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக அமைகிறது. முகத்தின் கோணங்கள், தாடை அமைப்பு மற்றும் கண்கள் பார்க்கும் திசை ஆகியவற்றின் வழியே முழு வரலாற்றையே ஒளிப்பதிவாளரால் எழுதிவிட முடியும்.

புரொஃபைல் ஷாட் ஏன் முக்கியமானது?

சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தை நேருக்கு நேர் பார்க்கும்போது நாம் அவர்களுடன் நேரடியாக உரையாடுவது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் புரொஃபைல் ஷாட்டில் ஒரு ‘மறைபொருள்’ ஒளிந்திருக்கும். முகத்தின் ஒரு பகுதி நிழலில் மறைந்திருக்கும்போது, அந்த கதாபாத்திரம் ஏதோ ஒன்றை மறைக்கிறது அல்லது ஆழமாகச் சிந்திக்கிறது என்ற பிம்பம் உருவாகிறது.

குறிப்பாக, 2 கதாபாத்திரங்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் புரொஃபைல் ஷாட், அவர்களுக்கு இடையேயான மோதலை (கன்ஃப்ரன்டேஷன்) மிக உச்சத்துக்குக் கொண்டு செல்லும். இது வெறும் காட்சி அமைப்பு மட்டுமல்ல; இது கதாபாத்திரங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியை (பவர் டைனமிக்ஸ்) விவரிக்கும் ஒரு கருவி.

லுக் ரூம் மற்றும் நெகட்டிவ் ஸ்பேஸ்

புரொஃபைல் ஷாட்டை வடிவமைக்கும் போது ஒளிப்பதிவாளர் இரண்டு முக்கியமான கலையியல் விதிகளைக் கையாள வேண்டும்:

லுக் ரூம் (லுக் ரூம் / லீட் ரூம்): கதாபாத்திரம் வலப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால், திரையின் வலது பகுதியில் அதிக இடைவெளி விடுவது.

இது அவர்கள் எதையோ பார்க்கிறார்கள் அல்லது ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்ற தெளிவையும் பார்வையாளர்களுக்கு ஒருவிதமான ஆசுவாசத்தையும் தரும்.

நெகட்டிவ் ஸ்பேஸ்: கதாபாத்திரத்தின் பார்வை இருக்கும் திசையில் இடைவெளி விடாமல், அவர்களின் முதுகுக்குப் பின்னால் அதிக இடைவெளி விடுவது. இது ‘நெகட்டிவ் ஸ்பேஸ்’ எனப்படும். இது அந்த கதாபாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையோ, இக்கட்டான சூழலில் சிக்கியிருப்பதையோ அல்லது பின்னால் ஏதோ ஆபத்து காத்திருப்பதையோ நுணுக்கமாக உணர்த்தும்.

‘தேவர் மகன்’ - பரதன் / பி.சி.ஸ்ரீராமின் புரொஃபைல் பாடம்

இந்திய சினிமாவில் புரொஃபைல் ஷாட்டுக்கு ஒரு பாடப்புத்தகம் போன்ற உதாரணம் ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் வரும் அந்தப் புகழ்பெற்ற ‘இருவர் உரையாடல்’ காட்சி. இயக்குநர் பரதன் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இணைந்து இந்தக் காட்சியை ஒரு குறுகிய சட்டகத்துக்குள் (டைட் ஃபிரேம்) அமைத்திருப்பார்கள்.

நாசர், கமல்ஹாசன் இருவரின் முகங்களும் புரொஃபைல் கோணத்தில் ஒன்றை யொன்று நோக்கியிருக்கும். இந்தக் காட்சி முழுவதுமே எந்தவித ‘கட்’டும் இல்லாமல் ஒரே நீண்ட ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்.

இரு முகங்களுக்கு இடையில் இருக்கும் அந்த மிகச்சிறிய இடைவெளிதான் அந்தத் திரைக்கதையின் மொத்தப் பதற்றத்தையும் சுமந்து நிற்கும். ஒருவரின் ஆதிக்கம் மற்றவரின் மீது நிழலாக விழுவதையும், இருவரின் ஈகோ மோதலையும் இந்த புரொஃபைல் கோணம் அப்பட்டமாக வெளிப்படுத்தும். பி.சி.ஸ்ரீராமின் ஒளியமைப்பு அந்த முகங்களின் சுருக்கங்களையும், கண்களின் கோபத்தையும் செதுக்கப்பட்ட சிலையைப் போலக் காட்டியிருக்கும்.

ஜப்பானிய மற்றும் சீனக் கலைப் படங்கள்:

ஜப்பானிய மாஸ்டர் யாசுஜிரோ ஓசு தனது படங்களில் கதாபாத்திரங்கள் தரையில் அமர்ந்து பேசும்போது மிகத் துல்லியமான புரொஃபைல் ஷாட் களைப் பயன்படுத்துவார். இது குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சொல்லப் படாத இடைவெளியைக் காட்டும். சீன இயக்குநர் வோங் கார்-வாய் `இன் த மூட் ஃபார் லவ்' திரைப்படத்தில் காதலின் ஏக்கத்தைக் காட்டப் புரொஃபைல் ஷாட்களை பயன்படுத்தியிருப்பார்.

குறிப்பாக அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சிகரெட் புகையை ஊதும்போது, அவர்களின் புரொஃபைல் கோணம் ஓவியத்தைப் போல காட்சியளிக்கும்.

ஆக் ஷன் படங்கள்

ஆக் ஷன் படங்களில், குறிப்பாக துப்பாக்கிச் சண்டைகளில், குறி வைக்கும் போது புரொஃபைல் ஷாட், ஒரு கட்டாயமான நுட்பம். ‘ஜான் விக்’ போன்ற படங்களில், துப்பாக்கியின் நேர்க்கோடும் ஜான் விக்கின் தீர்க்கமான பார்வையும் ஒரே புரொஃபைல் சட்டகத்தில் வரும்போது அது அந்த கதாபாத்திரத்தின் இலக்கை உறுதிப்படுத்தும்.

புரொஃபைல் ஷாட்டுக்கான ஒளிப்பதிவு நுட்பங்கள்

ஒரு புரொஃபைல் ஷாட்டின் வெற்றியைத் தீர்மானிப்பது அதன் ஒளியமைப்பு மட்டுமே. ஒளிப்பதிவாளர் கையாளும் முக்கிய நுட்பங்கள்:

பக்கவாட்டு ஒளி (சைட் லைட்டிங் – கீ ஃபிரம் புரொஃபைல் சைட்)

இது ஒரு பக்க முகத்தில் மட்டும் ஒளியை விழச் செய்து, மறுபக்கத்தை நிழலில் ஆழ்த்துவது.

ஆழம் மற்றும் அமைப்பு (டெக்ஸர் அண்ட் டெப்த்): இந்த ஒளி முகத்தின் மேடு பள்ளங்களை, சுருக்கங்களை அப்பட்டமாகக் காட்டும். ஒரு வயதான கதாபாத்திரத்தின் அனுபவத்தையோ அல்லது ஒரு முரட்டுத்தனமான கதாபாத்திரத்தின் தன்மையையோ காட்ட இது சிறந்தது.

ஸ்ட்ராங் கான்ட்ராஸ்ட்: ஒளியும் நிழலும் நேர்க்கோட்டில் சந்திக்கும்போது ஒரு நாடகத்தன்மை உருவாகிறது.

பின்புற ஒளி (பேக்லைட்டிங் / ரிம் லைட்)

கதாபாத்திரத்தின் பின்புறத்திலிருந்து ஒளி பாய்ச்சப்படுவது.

எல்லைக்கோடுகள் (டிஃபைன்ஸ் த அவுட்லைன்): இது கதாபாத்திரத்தின் முகத்தின் விளிம்புகளை மட்டும் பிரகாசமாக்கும். கதாபாத்திரத்தைப் பின்னணியிலிருந்து பிரித்துக் காட்டும் இதை ‘ரிம் லைட்’ என்றும் சொல்லலாம்.

கவித்துவமான காட்சிகள்: இது காதல் காட்சிகளுக்கோ அல்லது ஒரு கதாபாத்திரத்தின் கனவுலகை விவரிக்கும்போதோ கவித்துவமான உணர்வைத் தரும். லோ-கீ லைட்டிங்குறைந்த வெளிச்சம், அதிக நிழல்கள் கொண்ட அமைப்பு.

மர்மம் மற்றும் பதற்றம் (மிஸ்ட்ரி அண்ட் டென்ஷன்): த்ரில்லர் மற்றும் நோயர் (Noir) படங்களுக்கு இதுவே பிரதானம். கதாபாத்திரத்தின் கண்கள் மட்டும் ஒளியில் தெரிந்து, முகம் இருளில் மறையும்போது பார்வையாளர்களுக்கு ஒருவித பயமும் மர்மமும் தொற்றிக்கொள்ளும்.

ஹை-கீ லைட்டிங்

அதிக மென்மையான ஒளி, நிழல்களே இல்லாத சூழல்.

மென்மையான தோற்றம்: விளம்பரப் படங்கள் அல்லது ரொமான்டிக் காமெடி படங்களில் இவ்வகை லைட்டிங் பயன் படுத்தப்படுகிறது. ஒரு கதாபாத்திரத்தின் இளமையையும், உற்சாகத்தையும் காட்ட இந்த ‘பிரகாசமான’ புரொஃபைல் ஷாட்கள் உதவும்.

புரொஃபைல் ஷாட் ஒரு பக்கவாட்டுக் கோணம் மட்டுல்ல; அது ஒரு கதாபாத்திரத்தின் ஆன்மாவைத் துளைத்துப் பார்க்கும் ஒரு முயற்சி. ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் ஒளியின் திசையையும், கேமராவின் கோணத்தையும் சரியாகப் பொருத்தி, பேசாத பிம்பங்களின் வழியே பேசும் கதையை உருவாக்குவார்.

(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)

- rdop@gmail.com

திரையில் செதுக்கப்படும் முகங்கள்: புரொஃபைல் ஷாட்களின் அழகியல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 28
இன்​விசிபிள் கட்: கண்​கள் அறியாத தொடர்ச்​சி | ஒளி என்பது வெளிச்சமல்ல 27

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in