

சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சவுந்தர ராஜா. இவர், தற்போது வெளியாகியுள்ள ‘டோரதி’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷுக்கு கணவராக நடித்திருந்த சவுந்தரராஜாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
இதுபற்றி அவர் கூறும்போது, “இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் உடனடியாக சம்மதித்தேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். மதுரை பக்கம் நடக்கும் கதை என்பதால் அழைத்திருக்கிறார் என நினைத்தேன். கீர்த்தி சுரேஷ் ஜோடி என்றதும் முதலில் நம்பவில்லை. பிறகு அவருக்குக் கணவராக நடிக்க வேண்டும் என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. தேசிய விருது பெற்ற நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் அவர் இயல்பாகப் பழகினார்.
இதில் நெகட்டிவ் என்றாலும் நடிக்க வாய்ப்புள்ள கதாபாத் திரம் என்பதால் விரும்பி நடித்தேன். ஒவ்வொரு காட்சியின்போதும், நடிப்பதற்கு எனக்கு இன்னும் கூடுதல் வாய்ப்புகளைத் தருமாறு அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். அதனால்தான் அந்த கதாபாத்திரம் பேசப்படுகிறது.
கடந்த 16 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் போராடி வருகிறேன். 45 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். சினிமாவில் இன்னும் சிறந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கான இடம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.