

பரத் நடித்து 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘காளிதாஸ்’. இதன் அடுத்த பாகம் ‘காளிதாஸ் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்தில் இதையும் இயக்கியுள்ளார்.
பரத்துடன் அறிமுக நடிகர் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், கிஷோர், சுரேஷ் மேனன், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பூவே உனக்காக’ சங்கீதா, அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஃபைவ் ஸ்டார் செந்தில் தனது ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
ஏப்.10-ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, தாணு, ஜி.கே.எம். தமிழ்க்குமரன், எஸ்.ஆர்.பிரபு, அருண் விஷ்வா, நடிகர் ஹரீஷ் கல்யாண், இயக்குநர் பாண்டிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் பரத் பேசும்போது, “ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி, அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட நல்ல இயக்குநராக இப்படத்தின் இயக்குநர் செந்தில் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு முக்கியமான திருப்பம். ‘காளிதாஸ் 2’ வாயிலாக மீண்டும் இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வந்தது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.
இந்தப் படம் சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்துக்கொள்ளும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் சாம் சிஎஸ் இசை. ஒவ்வொரு காட்சிக்கும் வரும் பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது” என்றார்.