

இளைய மகள் திருமணத்தில் குடும்பத்துடன் அர்ஜுன்
‘எங்களது மவுனத்தை இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்வதாகக் கருதக் கூடாது’ என தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அர்ஜுன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தனது இளைய மகள் அன்ஜனாவின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தொடங்கி உள்ள அந்தப் பதிவில், “இதுபோன்ற ஒரு விஷயத்தைப் பொதுவெளியில் பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
எனது இளைய மகளின் திருமணத்தின்போது, என் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தன. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல், அவரது தனியுரிமையை மதித்து, அது குறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால், சரியான நேரத்தில் தனது தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவிப்பார்.
ஆனால், ஒரு தந்தையாக எனது மகளையும் அவரது குணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் மிகவும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.
நடிகர்களாகிய நாங்கள் பொது வாழ்க்கையில் இருக்கும்போது யூகங்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், யூகங்களுக்கும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் திட்டமிட்டு பரப்புவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது.
பொதுவெளியில் இருப்பது என்பது யார் வேண்டுமானாலும் கதைகளைப் புனைந்து பரப்புவதற்கோ, ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கோ உரிமம் அளிப்பதல்ல. எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற, இழிவான கருத்துகளைத் தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
அமைதி காப்பதே பல நேரங்களில் கண்ணியமான அணுகுமுறை என்று நாங்கள் எப்போதும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால், எங்களது மவுனத்தை இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்வதாகக் கருதக் கூடாது. அதேபோல், தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதற்கும், பெரிதாக்கப்படுவதற்கும் எங்களது அமைதி இடமளிக்காது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் சமீபத்தில் இத்தாலியில் நடந்தது. அந்த திருமணத்தில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி தம்பி ரமையாவும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இந்த நிலையில் அர்ஜுனின் இந்த விளக்கம் வெளிவந்துள்ளது.