Last Updated : 08 Apr, 2023 08:18 PM

1  

Published : 08 Apr 2023 08:18 PM
Last Updated : 08 Apr 2023 08:18 PM

சினிமாபுரம் - 7 | மதயானைக்கூட்டம் - ஆணாதிக்கத்தால் வாதை சுமந்த பெண்களின் கதை!

‘புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை. புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால்...’ எப்போதோ வாசித்த இந்த வரிகளை இப்போது இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.ரோகினி நதி நீரைக் கோலியர்களுடன் பங்கிட்டுக்கொள்ள விரும்பாத சாக்கியர்களின் எண்ணத்தை சித்தார்த்தன் (புத்தர்) எதிர்த்தார். சாக்கிய சங்கத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் முடிவுக்கு எதிராக இருக்கும் சங்க உறுப்பினருக்கு இரண்டு தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒன்று, அந்த உறுப்பினர் கொல்லப்பட வேண்டும் அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். சாக்கியர்களின் தலைவரான சுத்தோதனரின் மகனுக்கு இத்தகைய தண்டனையை வழங்கி, அதனால் வரும் விளைவுகளை ஏற்க சாக்கியர்கள் தயாராக இல்லை. அதனால் சங்கத்தின் முடிவுக்கு எதிரான தண்டனையை சித்தார்த்தனை தீர்மானிக்கும்படி சாக்கிய சங்கம் வேண்டுகிறது. சங்கத்தின் முடிவினை ஏற்று ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி, துறவு ஏற்கிறார் சித்தார்த்தன்.

விளைவு... மனதின் போக்கினையும் ஆசையின் ஆபத்தை அறிவுறுத்திய பேராசன் புத்தர் உலகிற்கு கிடைத்தார். ஆனால், நதி நீரை பங்கிட விரும்பாத சாக்கியர்களின் வீம்பு, சங்கத்தின் முடிவுக்கு கட்டுப்பட்ட சித்தார்த்தனின் விருப்பத்திற்குமான விளைவுகளை தன் மகனுடன் சேர்ந்து சுமந்தது இந்த இரண்டுக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத யசோதராவே..!

பொது ஆண்டுக்கு (கி.மு.) ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தநிலை இன்றும் மாறிவிட்டதாய் தெரியவில்லை. ஆதிக்கம் சுமத்தலையும் உழைக்கும் குடிகளிடம் இப்போதும் இந்தப் போக்கு புரையோடிப்போய் இருக்கிறது. ஆண்களின் விருப்பங்களையும் வீரத்தின் பாடுகளையும் விரும்பி ஏற்கும் பதுமைகளாய் பெண்கள் இருக்கும் இத்தகைய கதை மறைபொருளாய் சொல்கிறது கடந்த 2013-ம் ஆண்டு விக்ரம் சுகுமாரனின் இயக்கத்தில் வெளிவந்த மதயானைக்கூட்டம் திரைப்படம்.

மதயானைக்கூட்டம்: எந்த விதமான தீயப்பழக்கங்களும் இல்லாத ஊர் பெரிய மனிதர் ஜெயக்கொடித்தேவர். ஆனால் அவருக்கும் ஒரு குறை இருந்தது. மனிதருக்கு செவனம்மா, அம்மு என இரண்டு மனைவிகள். செவனம்மாவுக்கும் அம்முவுக்கு ஆஸ்திக்கு ஒண்ணு ஆசைக்கு ஒண்ணு என இரண்டு வாரிசுகள். செவனம்மா ஜெயக்கொடித்தேவரை விரும்பி கல்யாணம் செய்தவர். அம்முவோ ஜெயக்கொடித்தேவரால் விரும்பப்பட்டவர். அதனாலேயே ஜெயக்கொடித்தேவர் அம்முவுடனேயே இருந்து விடுகிறார். தனக்கு துரோகம் செய்த கணவனையும், துரோகத்திற்கு காரணமான அம்முவையும் வெறுக்கும் செவனம்மாளுக்கு வரிசுகளிடம் அந்த வஞ்சம் இல்லை.

செவனம்மாளுக்கு ஒரு அண்ணன்... பெயர் வீரத்தேவர். ஊரில் இவரும் பெரிய கைதான். தங்கைக்குத் துரோகம் செய்த மச்சானையும், அதற்கு காரணமானவர்களையும் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருப்பவர். ஜெயக்கொடித்தேவருக்கு ஊருக்குள் இருக்கும் மரியாதையும் செவனம்மாளின் வார்த்தையும் அந்த வஞ்சத்திற்கு அணை போட்டு வைத்திருந்தன. இந்தச் சூழ்நிலையில் திடீரென ஓர் இரவில் ஜெயக்கொடித்தேவர் மாரடைப்பால் இறந்து விடுகிறார். அந்தப் பெரிய வீட்டுச்சாவு, அடுத்தடுத்து மதயானைக்கூட்டத்தின் வெறியாட்டத்திற்கு வழிவகுக்கிறது. யார், யாரை, எதற்காக, எப்படி பழிதீர்த்துக் கொண்டார்கள் என்பதை துரோகமும் வீரமுமாக நியாயப்படுத்திச் செல்கிறது திரைப்படம்(?)

மதயானைக்கூட்டமும் கிராமத்தின் சுவடுகளும்: வாழ்க்கையின் அர்த்தத்தை, அதன் தத்துவத்தை உணர்த்துவதில் இற(ழ)ப்புக்கு முக்கியமான பங்குண்டு. அதனால்தான் கிராமங்கள் இறப்பை ஆடிப்பாடிக் கொண்டாடின. அதிலும் சில சாவுகளைக் கல்யாணச்சாவு என்று சொல்லிக் கொண்டாடுவதுமுண்டு. இறந்தவர் பெண்டு பிள்ளைகளுக்கு பாடுகள் பார்த்து பேரன் பேத்தி எடுத்து, வாழ்க்கையை ஆண்டு அனுபவித்து இறந்திருந்தால் அந்தச் சாவு கல்யாணச் சாவுதான். துக்கம் நிகழ்ந்த இரவிலிருந்தே கொண்டாட்டம் தொடங்கி விடும். உறவை இழந்தவர்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வரும் உள்ளூர்க்காரர்கள், உறவினர்கள் துக்க வீட்டுக்கார்களுடன் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருப்பது ஒருவகை உணர்வு என்றால், துக்கத்திலும் வந்தவர்களுக்கு, சுக்கு காரத்துடன் கருப்பட்டிக் காப்பி கொடுத்து உபசரிப்பது வேறுவகை உணர்வு.

என் துக்கத்துக்காக இரவெல்லாம் நீ விழித்திருக்கிறாய்... தூக்கம் இல்லாத இரவும் துக்கம் தீராத அழுகையும் முதலில் தொண்டையைத்தான் பாதிக்கும்.. எனக்காக நீ துக்கப்படு... துயரப்படாதே என்று இழவு வீடுகளில் கொடுக்கப்படும் கருப்பட்டிக் காப்பி சாவுச் சடங்குகள் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் மனிதத்தின் ஒரு துளி. இவை பதிவு செய்யப்படவேண்டிய பொக்கிஷங்கள் என்பது தனிக்கதை.



இரவு காப்பியில் தொடங்கும் சாவுச் சடங்குகள், இறந்த வீட்டுக்கு போனாலும் வெறுங்கையோடு போகக் கூடாது என்பதற்காக பெட்டி அரிசியோடு போவது முதல் துக்கம் விசாரிக்க வந்திருந்தாலும், வந்தவர்களை பசியோடு அனுப்பக் கூடாது என இறந்தவரை மயானக் கரைக்கு கொண்டு சென்றதும் போர்க்கால நடவடிக்கையாய் வீடலசி, துக்கம் மறைத்து வந்தவர்களுக்கு விருந்து வைப்பது வரை எல்லாமே கொண்டாட்டத்தின் நீட்சிதான். இதில் உச்சம் என்பது ஆடலும் பாடலும். இறந்தவரின் புகழ் சொல்லி பிழைப்பைச் சொல்லி, இனி எப்போதும் பார்க்கவே முடியாத ஒருவரின் நினைவுகளை ஓலமாக... ஒப்பாரியாக பாடிக் கொண்டாடுகிறது இந்த ஆடலும் பாடலும். கோயில் திருவிழாவில் நடக்கும் கரகாட்டம் போன்றதுதான் இந்த கூத்தும். ஆனாலும் ஒரு வித்தியாசம்... இங்கே பெரும்பாலும் ஆண்களே பெண்களாக வேடமிட்டு ஆடுகிறார்கள்.

மதயானைக்கூட்டத்தில் ஜெயக்கொடித்தேவரின் சாவில், அதற்கான கொண்டாட்டப் பாடலுடன் தொடங்கும் படம் ஒப்பாரியை, சாவுச்சடங்குகளை, துக்கத்தை, விருந்தோம்பலை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் மிக அழகாக பதிவு செய்திருக்கும். அதில் இறந்தவரின் சமூதாய தலைவர்களின் புகழ்பாடுவது முதல் துக்கத்தை மறைக்க சுயகேலி செய்து இரட்டை அர்த்த வசனங்கள் பேசி கலாய்பது வரை அத்தனையும் ஆவணப் பதிவுகள்.

வாதை சுமந்த பெண்களின் கதை: ஜெயமாக வாழ்ந்து கொடுத்து அழிந்த ஜெயக்கொடித்தேவர் நாடிக்கட்டுடன் (மரணமடைந்து நடு வீட்டில் மாலை மரியாதையுடன் கம்பீரமாக அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்காக அனைத்தையும் இழந்து மிச்ச வாழ்நாளைக் கழிக்கப்போகும் இரண்டு பெண்கள் துக்கத்தை அடக்கிக்கொண்டு ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருக்கிறார்கள். வாழ்ந்த நாளெல்லாம் தள்ளிவைத்து வேடிக்கைப்பார்த்த செவனம்மா, ‘நா எந்த விதத்துலய்யா குறஞ்சு போனே... என் விட்டுட்டு அவ கூட வாழப் போன’ என்ற பதில் கிடைக்காத கேள்வியுடன் இறந்தவரின் காலடியில் உட்கார்ந்திருக்கிறாள்.

‘என் கூட இருக்கும் போதெல்லாம் ராசா மாதிரி வாழ்ந்து என்னை ராணியாவே பாத்துக்கிட்ட என் ராசா... நா இப்போ உன் கிட்ட வந்தா இந்தக் கூட்டம் உன்னை நாதியில்லாதவனா ஆக்கிடுமே... கடைசி பயணம் போனாலும் நீ கம்பீரமாவே போ... என் ராசா... நா தள்ளி நின்னு பாத்து காரியம் செஞ்சுக்கிறேன்’ எனத் தீர்க்க முடியாத துக்கக்கதுடன் தெருவோரத்தில் தன் மகனின் தோள் சாய்ந்து இருக்கிறாள் அம்மு.

செவனம்மாவுக்கும் அம்முவுக்கும் எந்த விரோதமும் இல்லை. அப்படியென்றால் அம்மு மீதான செவனம்மாளின் கோபத்திற்கு காரணம் என்ன? அவள் தன் கணவனுக்கு இரண்டாவது தாரமாக ஆகிவிட்டாளே என்ற ஆதங்கமா? அது காரணமாக இருக்க முடியாது. தன் மகளின் வயதொத்த பிள்ளைகளுக்கு சித்தியாக, தான் பெற்ற மகளை தனது அண்ணனுக்கு இரண்டாவது தாரமாக கட்டிக்கொடுக்க சம்மதித்தவள் தான் செவனம்மா. அப்படியென்றால் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு அவள் எதிரியில்லை. சரி... அம்மு மீதான அந்தக் குரோதத்திற்கான காரணம் தான் என்ன... காரணம் அம்மு தன் சாதியைச் சேர்ந்தவள் இல்லை... அதுதான் காதல் கணவன் செய்த துரோகத்திற்கு அம்முவைத் தண்டிக்கச் சொல்லியது.

ஜெயக்கொடித்தேவர் என்ற ஆதிக்க ஆணின் விருப்பத்திற்காக அவரைத் தள்ளி வைத்து துக்கம் சுமந்த செவனம்மா... அந்த கோபத்தை அம்மு என்ற சகப்பெண்ணின் மீது இறக்கி வைத்தாள். சரி அந்த ஆத்திரம்... கணவனின் மறைவுக்கு பின்னாலாவது அடங்கியதா... ஆயிரமாயிரம் ஆண்டுகளால் கனன்று கொண்டிருக்கும் தீ அத்தனை சீக்கிரத்தில் அடங்கி விடுமா.. துக்கத்தில் கொஞ்சம் அடங்கியிருந்த அந்த தீக்கங்கு... அதற்கு பிறகு அண்ணன் வீரத்தேவர் என்ற ஆணின் இறுமாப்புக்காக... தன்னிடம் தஞ்சமடைந்த அம்முவை விஷம் வைத்துக் கொன்று பழி வாங்கிக் கொள்கிறது. இப்போதும் பசியங்காத அந்த தீக்கங்கு அம்முவின் மகனை அண்ணனின் வளரிக்கு பலி கொடுத்து வேடிக்கை மட்டுமே பார்த்து நின்றது.

இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டியது இருக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சியில் வீரத்தில் வேலுநாச்சியாராகவும், கருணையில் மீனாட்சியாகவும் சொல்லப்படும் செவனம்மா யாதார்த்தத்தில் இந்த இரண்டுமாகவும் இல்லை. இரண்டின் கலவையாக காட்டப்பட்டாலும் குருதி பலி கேட்கும் ஏதோ ஒன்றாகத்தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். இல்லை... இல்லை... சுற்றியிருந்த ஆண்களால் ஆட்டிவைக்கப்பட்டிருக்கிறாள். அதனால் தான், படத்தின் கடைசி காட்சியில் ஆட்டிவைக்க ஆண்களே இல்லாமல் தனித்துவிடப்படும் செவனம்மாள் தன்னுடயை சுயம் தேடி வெம்முகிறாள். அவளுடைய துக்கம் காலம்தோறும் சுமந்த வாதையின் கோர ஓலமாக வெளிப்படுகிறது..

ஆற்றல் நிறைந்தவர்களாக காட்டப்பட்டாலும் செவனம்மாக்கள் ஆண்களாலேயே ஆட்டிவிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் செய்யாத செயலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.. இந்த இடத்தில் மீண்டும் மகுடேஸ்வரனின் உயிரின் வலி என்ற கவிதை நினைவுக்கு வருகிறது

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை.
..

அது வெறும் விசும்பல் மட்டும் இல்லை. சொல்லில் தீராத தன் மீது சுமத்தப்பட்ட வாதைகளுக்கான எதிர்வினை.. செவனம்மாளின் அழுகை போல!

முந்தைய அத்தியாயம் > சினிமாபுரம் - 6 | முதல் மரியாதை - தீராத பேரன்பின் பாரம் குறைத்த சுமைதாங்கி கல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x