Published : 25 Mar 2023 06:18 AM
Last Updated : 25 Mar 2023 06:18 AM

“விடுதலை வாய்ப்புக்கு அந்த விஷயம்தான் காரணம்” - சூரி

சூரி என்கிற காமெடி கலைஞனை, கதையின் நாயகனாக்கி இருக்கிறது, வெற்றி மாறனின் 'விடுதலை'. அவரின் பல வருட உழைப்பிற்குத் தமிழ் சினிமா தந்திருக்கும் அடுத்தக் கட்டம். கண்களை இடுக்கி, கையில் துப்பாக்கியுடன் சூரி குறி பார்க்கும் சுவரொட்டிகள், அவரின் இன்னொரு முகம் காட்டுவதாக சொல்கிறது, கோலிவுட். வரும் 31-ம் தேதி வெளிவரும் இந்தப்படம் பற்றி பேசினோம் சூரியிடம்.

முதன்முறையா கதையின் நாயகன் ஆகியிருக்கீங்க...

எல்லோரையும் போல எனக்கும் வெற்றிமாறன் படங்கள் பிடிக்கும். ஒரு ரசிகனா, அவர் படத்துல எப்படியாவது நடிச்சிடணும்னு எனக்கு ஆசை இருந்தது. அப்ப , ‘ஏதாவது வாய்ப்புக் கிடைக்குமா?’ன்னு அவர் தரப்புல கேட்டதும், ‘நீங்க நடிக்கிற மாதிரி காமெடிலாம் அவர் படத்துல இருக்காது’ன்னு தகவல் வரும். உடனே, ‘காமெடின்னு இல்லை, என்ன கதாபாத்திரமா இருந்தாலும் ஒரு 4 சீனாவது நடிக்கணும்’னு சொல்வேன். ‘வட சென்னை’க்கு முன்னால இருந்தே அவரை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு நாவலை படமா பண்ணலாம்னு எங்கிட்ட சொன்னார் வெற்றிமாறன்.

நீதான் கதையின் நாயகன்னு சொன்னார். அப்ப நான் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் நேரம், அப்ப பார்த்து கரோனா. அந்தப் படம் அவ்வளவுதான்னு சொல்லிட்டாங்க. எனக்கு ரொம்ப வருத்தம். பிறகு வேற கதை பண்றோம். அதுல நீதான் கதையின் நாயகன்னு சொன்னதும் எனக்கு மீண்டும் மகிழ்ச்சி. அப்படி தொடங்கியதுதான் ‘விடுதலை’. இதுல கடைசி நிலை காவலர் குமரேசன்ங்கற கேரக்டர்ல நடிக்கிறேன். சீரியஸ் கேரக்டர்தான். ஆனா, மத்தவங்களுக்கு கொஞ்சம் காமெடியா இருக்கும்.

வெற்றிமாறன் யாரை வேணா இந்த கேரக்டருக்கு தேர்வு பண்ணியிருக்கலாம். நீங்க எப்படி?

உண்மைதான். அவர் நினைச்சா இங்க இருக்கிற யாராவது ஒரு ஹீரோவை கூட்டிட்டு வந்து நடிக்க வச்சிருக்க முடியும். என்னை எதுக்கு இந்தக் கதைக்கு செலக்ட் பண்ணினார்?னு எனக்கும் அந்த கேள்வி இருந்தது. ஆனா, இந்த கதையில வர்ற கடை நிலை காவலர் குமரேசன் கேரக்டருக்கு தேவையான அப்பாவித்தனம் எங்கிட்ட இருக்குன்னு இயக்குநர் முடிவு பண்ணினார். அதனாலதான் தேர்வு பண்ணினாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுக்கு ஏற்ற மாதிரி இந்தப் படத்துல பழைய சூரியை பார்க்க முடியாது.

முதல்ல ஒரு பார்ட்டுன்னுதானே ஆரம்பிச்சீங்க?

அப்படித்தான் ஆரம்பிச்சாங்க. இதுல வர்ற வாத்தியார் கேரக்டர்ல, பாரதிராஜா சார் நடிக்கற மாதிரி இருந்தது. மலை பின்னணியில் நடக்கிற கதை இது. உடல்நிலை கருதி அவரால நடிக்க முடியாம போனதும், அந்த இடத்துக்கு விஜய் சேதுபதி வந்தார். அவர் வந்ததும் ஸ்கிரிப்ட் பெரிசாச்சு. அப்புறம்தான் ரெண்டு பார்ட்டுன்னு முடிவு பண்ணி எடுத்தாங்க. பட்ஜெட் அதிகமாச்சு. அதுக்கான விஷயங்கள் படத்துல இருக்கும்.

காட்டுக்குள்ள நடந்த ஷூட்டிங்ல எல்லோருமே ரொம்ப கஷ்டப்பட்டீங்களாமே?

ஆமா. சிறுமலை காட்டுக்குள்ளதான் பெரும்பாலான ஷூட்டிங் நடந்தது. முதல்ல கார்ல போயி, ஒரு இடத்துல இறங்கணும். அங்கயிருந்து இன்னொரு வண்டியில ஏறி, வேற பகுதியில இறங்கணும். சில கிலோ மீட்டர் போனதும் இறங்கி, ஜீப்ல போகணும். பிறகு நடக்கணும். இவ்வளவு கடந்து ஸ்பாட்டுக்கு வந்தா, அங்க இல்லாத பாம்பு, பூச்சிகளே கிடை
யாது. எல்லாமே இருக்கும். திடீர்னு மழை வேற வரும். வந்தா, உடனே அங்கயிருந்து கிளம்பிடணும். ஏன்னா, மழை தண்ணிப் பட்டதும் அந்த மண்ணு ஊறிரும். சொத சொதன்னு ஆகி நடக்கவே முடியாது. அதே போல ஆக்‌ஷன் காட்சிகள்ல பல பேருக்கு அடி பட்டிருக்கு. நான் மட்டுமல்ல, மொத்த டீமுமே கடுமையா உழைச்சிருக்காங்க.

இதுவரை காமெடியனா நடிச்சுட்டு, இப்ப சீரியஸ் கேரக்டர்ல நடிக்கறது கஷ்டமா இருந்திருக்குமே?

எனக்கு என் மேல நம்பிக்கை இருந்தது. எல்லா கதாபாத்திரங்கள்லயும் நடிச்சிட முடியும்ங்கற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் வெற்றிமாறன் இயக்கம் அப்படிங்கறதால, தயக்கம் இருந்தது. அவர் பெரிய இயக்குநர். நடிப்புல அவரை திருப்திப்படுத்திட முடியுமா?ன்னு பயம் இருந்தது. முதல் நாள் ஷூட்டிங்ல, நான் வழக்கம்போல நடிக்கிற மாதிரி பண்ணினேன். அவர் கூப்பிட்டு ‘எனக்கு அந்த சூரி வேண்டாம், இதுல நீங்க குமரேசன் அப்படிங்கற கேரக்டர் பண்றீங்க. அவர் மனநிலை என்னங்கறதை நான் சொல்றேன். அதை
உள்வாங்கி அவரா மாறுங்க போதும்’னு சொன்னார். நான் மாறினேன். அப்புறம் பிரச்சினையே இல்லை. நான் குமரேசனா மாறியிருக்கேன்னு நம்பறேன்.

சினிமாவில போராடி வந்தவங்கள்ல நீங்களும் ஒருத்தர். காமெடியனா இருந்து இப்ப கதை நாயகனா உயரம் தொட்டிருக்கீங்க. உங்களைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படியிருக்கு?

சந்தோஷமா இருக்கு. நகைச்சுவை நடிகனா வந்துட்டேன். கதையின் நாயகனா நடிக்கணுங்கற ஆசை எனக்கு இருந்ததில்லை. நிறைய பேர் என்கிட்ட காமெடி படங்கள்ல ஹீரோவா நடிங்கன்னு வந்து கேட்டிருக்காங்க. நான் தவிர்த்துட்டேன். ஆனா, வெற்றிமாறன் படத்துல நான் நடிப்பேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. இப்ப நடிக்கறதுக்கு காரணம், என் மேல நான் வச்சிருக்கிற நம்பிக்கை. அதோட, என் தகுதியை நான் வளர்த்திருக்கேன்னும் நினைக்கிறேன்.

இனி தொடர்ந்து உங்க பயணம் எப்படியிருக்கும்? காமெடியா, கதையின் நாயகனா?

நான் நடிச்சுட்டே இருக்கணும், அவ்வளவுதான். ‘விடுதலை’படம் எனக்கு பெரிய நம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுத்திருக்கு. அதனால நான் எதுக்கும் தயாராகத்
தான் இருக்கேன். நான் பேருந்து நிலையத்தில் நிற்கிறவன். எந்த பஸ் வருதோ, அதுல ஏறி போயிட்டே இருக்க வேண்டியதான்.

அடுத்து ஹீரோவா என்ன படங்கள் பண்றீங்க?

தம்பி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்துல நடிக்கிறேன். ‘கூழாங்கல்’ வினோத்ராஜ் இயக்குகிறார். இயக்குநர்கள் அமீர், விக்ரம் சுகுமாரன் இயக்கும் படங்கள்ல அடுத்தடுத்து நடிக்க போறேன். ராம் இயக்கி இருக்கிற, ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்துல நிவின் பாலியோட நடிச்சிருக்கேன். அதுலயும் முக்கியமான கேரக்டர்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x