க்ரவுட் ஃபண்டிங் படத் திட்டம் நின்றது ஏன்? - கோபி, சுதாகர் விளக்கம்

க்ரவுட் ஃபண்டிங் படத் திட்டம் நின்றது ஏன்? - கோபி, சுதாகர் விளக்கம்
Updated on
2 min read

கோபி மற்றும் சுதாகர் இணைந்து தயாரித்து நடிக்கும் முதல் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் க்ரவுட் ஃபண்டிங்கால் கைவிடப்பட்ட தங்களது படத் திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வழியே புகழடைந்த கோபி, சுதாகர் இருவரும் இணைந்து தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து நடைப்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கோபியும், சுதாகரும் இணைந்து பேசினர். தொடக்கத்தில் பேசிய சுதாகர், “மிகவும் மகிழ்ச்சி. இந்த நாளுக்காகத்தான் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். இது எப்போது நடக்கும் என்ற போராட்டத்தில் இருந்தோம்.

தற்போது இந்தப் படம் மிகவும் நல்ல கதையாக அமைந்துள்ளது. இந்தக் கதையை இயக்குநர் படத்தைப் பார்ப்பது போல ஒவ்வொரு காட்சியாக விவரித்தார். முழுநீள காமெடி படமாக இல்லாமல் சென்டிமென்ட் கொண்ட படமாகவும் இருக்கும். கதையைக் கேட்டுவிட்டு, கோபிக்கு கால் செய்து, ‘படம் நல்லாயிருக்குடா பண்லாம்டா’ என கூறினேன். அப்படித்தான் இது நிகழ்ந்தது. ஒவ்வொருவராக படத்தில் இணைய இணைய அதன் அடர்த்தி கூடியது. உங்களின் ஆதரவால் தான் நாங்கள் இன்று இங்கே இருக்கின்றோம்” என்றார்.

கோபி பேசுகையில், “இது இரண்டாவது ப்ராஜெக்ட். முதல் ப்ராஜெக்ட் 2019-ல் க்ரவுட் ஃபண்டிங் மூலம் பண்ணலாம் என நினைத்து ஆரம்பித்தோம். கரோனா ஊரடங்கால் படத்தின் பட்ஜெட் எங்களின் கைமீறி சென்றதால் அந்த ப்ராஜெக்ட்டை தற்காலிகமாக நிறுத்திவிட்டு (Pause), இரண்டாவது படத்தை ஆரம்பித்திருக்கின்றோம். க்ரவுட் ஃபண்டிங் செய்த மக்களுக்காக இதை தொடங்கியுள்ளோம். இத்தனை நாட்கள் பொறுமையாக காத்திருந்த மக்களுக்கு நாங்கள் கொடுக்கும் கைமாறு இந்தப் படம்.

இந்தப்படம் முழுக்க நாங்கள் உழைத்த பணத்தைக் கொண்டு உருவாக்கும் படம். அதேசமயம் க்ரவுட் பண்டிங் செய்த மக்களுக்கு படத்தை சமர்ப்பிக்கிறோம். இந்தப் படத்தில் சார்லி சாப்ளின் போல நடிக்க மாட்டோம். அது ஒரு சிறிய கனெக்ட்தான். மற்றபடி படம் அதைச் சார்ந்தது அல்ல” என்றார்.

‘வடமாநில தொழிலாளர்களை வைத்து வீடியோ பதிவேற்றியிருந்தீர்கள். அதற்கான கமெண்ட்ஸை எப்படி பார்க்கிறீர்கள்?’ என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த சுதாகர், “அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சிலர் அது ஓவராக இருப்பதாக கருதியிருக்கலாம். நாங்கள் நடக்கும் விஷயங்களை பிரதிபலிக்க வேண்டும் என நினைத்தோம். தொடர்ந்து செய்திகளை பார்த்து வந்தோம். அதன் விளைவாக வீடியோவை வழக்கம்போல பதிவு செய்தோம்” என்றார்.

படத்தில் சமூக கருத்து இருக்குமா? என கேட்டதற்கு, ‘கண்டிப்பாக படத்தில் கருத்து இருக்கும். ஆனால், அது கதையுடன் பயணிக்கும் வகையில் இருக்குமே தவிர, திணிப்பது போலவும், ‘கிறிஞ்’சாகவும் இருக்காது” என சுதாகர் தெரிவித்தார். இறுதியாக இருவரும், “நாங்கள் சென்னைக்கு வரும்போதே சினிமா கனவுடன் தான் வந்தோம். தற்போது ஒவ்வொரு படியாக முன்னேறி வருகிறோம். நன்றி” என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in