Last Updated : 15 Sep, 2022 12:53 PM

2  

Published : 15 Sep 2022 12:53 PM
Last Updated : 15 Sep 2022 12:53 PM

வெந்து தணிந்தது காடு Review: சிம்புவின் முழு அர்ப்பணிப்பும், அகப்படாத ஆன்மாவும்!

திருச்செந்தூரின் செங்காட்டு பூமியின் அப்பாவி இளைஞன் மும்பையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களால் தனது அப்பாவித்தனத்தை இழந்தால் அதுவே 'வெந்து தணிந்தது காடு'.

திருச்செந்தூரின் செம்மண் காடுகளில் தாய், தங்கையுடன் கருவேல மரங்களை கொண்டு வாழ்க்கை நடத்தி வரும் முத்துவீரன் (சிலம்பரசன்), ஓர் அசாதாரண சூழலில் சொந்த ஊரான நடுவக்குறிச்சியில் இருந்து இடம் மாறுகிறார். சில தடைகளை தாண்டி பிழைப்புத் தேடி மும்பைக்கு செல்லும் அவர், ஹோட்டல் ஒன்றில் அடைக்கலம் தேடிக்கொள்கிறார். அந்த ஹோட்டலில் நடக்கும் வேறு சில சம்பவங்களிலிருந்து விலகி நிற்க முற்படும் முத்துவை மும்பை நகரம் எப்படி பரிணமிக்கவைக்கிறது என்பது மட்டுமில்லாமல், விருப்பமில்லாத வாழ்க்கையில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மீதிக் கதை.

தென் தமிழகத்தின் மணல் காடுகளின் வெப்பத்தில் தகிக்கும் 21 வயது இளைஞனாக இன்ட்ரோ கொடுக்கும் சிம்பு, நடுவக்குறிச்சி என்னும் சிற்றூரில் வசிக்கும் இளைஞனுக்கே உரித்தான உடல்வாகுக்கு ஏற்றுவாறு உடலை உருக்குலைத்து மெனக்கெட்டுள்ளார். வழக்கமான மாஸ், ஆக்‌ஷன், பஞ்ச், டூயட் இல்லாத முற்றிலும் வித்தியாசமான, புதுமையான சிம்புவாக ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். தூத்துக்குடியின் வட்டார வழக்கை பேசுவதில் தொடங்கி, அப்பாவியாக காதலியிடம் வயதைச் சொல்வது என முத்துவீரனாக மிளிர்ந்துள்ளார். எளிய வீட்டில் வசித்தாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் 'கையை மீறி போனா கறுக்கு அருவா' போன்ற வசனம் பேசுவது, க்ளைமாக்ஸ் சீனில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது என சிம்பு தனது வரவை (மாநாடு படத்துக்கு அடுத்ததாக) அழுத்தமாக பதித்துள்ளார்.

கதாநாயகியாக சித்தி இத்னானி, கெளதம் மேனனின் டெம்ப்ளேட் காதல் நாயகியாக வலம் வருகிறார். டூயட் இல்லாத, காட்சிகளில் நிறைய வருவதால் இத்னானியின் பாத்திரம் பெரிய அயர்ச்சியை கொடுக்காமல் கடந்து செல்கிறது. சிம்புவின் தாயாக ராதிகா சரத்குமார். முள்காட்டில் சிக்கிக்கொண்ட மகனின் எதிர்காலத்தை நினைத்து உருகும் அம்மாவாக சில காட்சிகளே வந்தாலும் தனது பணியை கச்சிதமாக செய்துள்ளார். இவர்களைத் தவிர, மலையாள சினிமாவின் குணசித்திர நடிகர்கள் சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் அப்புக்குட்டி, ஜாபர் சாதிக் என மற்றவர்கள் ஓகே ரகமாக தேவையறிந்து படத்தின் ஓட்டத்துக்கு கைகொடுத்துள்ளனர்.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாததை நினைத்து வருந்தும் இளைஞனாக சிம்புவுடன் என்ட்ரி காட்சியுடன் விரியும் 'வெந்து தணிந்தது காடு' முதல் பாதி புலம்பெயர் தொழிலாளர்களாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து மும்பை சென்றுள்ளவர்கள் சந்திக்கும் இன்னல்களை தேவையான டீட்டெயிலிங்குடன் சொல்லி, நடுவக்குறிச்சி என்ற குக்கிராமத்தின் வெப்பத்தை போலவும், நிலத்தை போலவும் சிறுகதையாக ரசிக்க வைக்கிறது. இடைவேளைக்கு முன்பாக படத்தின் ஆன்மா வெளிப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை ஒரு சிறிய சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சி மூலம் சொல்லி ஹைப் ஏற்றிய கெளதம் மேனன், அதே ஹைப்பை இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு கடத்துவதில் தவறுகிறார்.

இரண்டு குழுவுக்கு இடையேயான மோதலாக மாறும் இரண்டாம் பாதி, அதில் அழுத்தம் இல்லாத திரைக்கதை அமைப்பால் தடுமாறுகிறது. முத்துவீரனின் பாத்திரத்தை முன்னிலைப்படுத்த முயன்று, அவருக்கு நிகரான டான்களாக வரும் இருவரின் பாத்திர வடிவமைப்பை குறைத்துள்ளது கதையின் ஓட்டத்துக்கு தடையாக அமைந்துள்ளது. நாயகன் போன்ற மும்பையின் கேங்ஸ்டர் படங்கள் இதற்கு முன்பு தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படங்களாக அமைந்துள்ளன. அவற்றுக்கான அடித்தளம் கேங்ஸ்டர் ரோலுக்கான தெளிவான பார்வையும், அதற்கான அரசியலும், திரைக்கதையும். ஆனால், இங்கு இரண்டு கேங்ஸ்டர்கள்; அதிலும் மலையாள சினிமாவின் மூத்த நடிகர் சித்திக் போன்றோரை வைத்துக்கொண்டு அவருக்கான வலுவான திரைக்கதையை கொடுக்காமல் வீணடித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

அவர்கூட ஓகே, சிம்புவின் குருவாக வரும் கேங்ஸ்டர் ரோல் மோசமான சித்தரிப்பாகவே உள்ளது ரசிகர்களை சோதிக்கிறது. இவர்களுக்குள்ளான சண்டை ஏன் என்பதைகூட தெளிவாக சொல்லவில்லை. இயக்குநர் கெளதம் தனது வழக்கமான டச்சுடன் காதல் காட்சிகளை ரசிக்கும்படியாக அமைத்திருக்கிறார். உதாராணமாக நாயகி எனக்கு 25 சொல்லும்போது எனக்கு 21 தான் என சிம்பு சொல்வது VTV படத்தின் நினைவலைகளை ஏற்படுத்துகிறது. என்றாலும், காதல் காட்சிகளை கதையின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு கோர்வையாக சொல்லமால், இடையிடையே ஒரு கடமையாக வந்து சொல்லப்பட்டுள்ளது அயர்ச்சியை கொடுக்கிறது.

'நிலம் தான் இங்க பொண்ணு மாதிரி, நிலத்தை மீட்கிறது, பறிக்கிறது தான் இங்க நடக்கிற மோதல்' என வசனங்கள் வைத்துவிட்டு, நில அரசியல் அங்கு யாருக்கு எதிராக செய்யப்படுகிறது என்பதை தெளிவில்லாமல், மலையாளம் மற்றும் தமிழ் பேசும் இரு குழுக்களுக்கு இடையேயான விரோதமாக சொல்லியிருப்பது போன்ற கவனக்குறைவுகள் இரண்டாம் பாதியில் ஏராளம்.

படத்தின் பெரிய ஆறுதல் சிம்புவின் நடிப்போடு 'மறக்குமா நெஞ்சம்', 'மல்லிப்பூ' போன்ற பாடல்களால் வருடும் ரஹ்மான் இசையும். பின்னணி இசையிலும் ரஹ்மான் தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். சித்தார்த்தாவின் சினிமோட்டோகிராபி, ஆண்டனியின் படத்தொகுப்பு போன்றவை மற்ற ஆறுதல்கள். படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தூத்துக்குடியின் மண் மணம் மாறாத வட்டார மொழியுடன், நல்ல வசனங்களும் கவனம் பெறுகிறது.

மிகவும் யதார்த்தமாக சென்ற முதல் பாதி போல், இரண்டாம் பாதியையும் தெளிவான டீடெயிலிங் உடன் சொல்ல வந்தவையை கச்சிதமாக சொல்லியிருந்தால் 'வெந்து தணிந்தது காடு' தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமாக களமாடியிருக்கும். ஆனால், பல குறைபாடுகளுடன் ஆன்மா இல்லாத கேங்ஸ்டர் கதையாகவே மனதில் நிற்கத் தவறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x