Last Updated : 12 May, 2016 10:24 AM

 

Published : 12 May 2016 10:24 AM
Last Updated : 12 May 2016 10:24 AM

இதுதான் நான் 25: நடந்தா கைத்தட்டல்... நின்னா கைத்தட்டல்!

அப்பாவை பார்த்து, ‘‘மாஸ்டர், இப்படி கஷ்டமான ஸ்டெப் போடச் சொன்னா என்னால ஆட முடியுமா?’’ன்னு ரஜினி சார் கேட்டார்.

‘‘உங்க ஸ்டைல்ல பண்ணா நல்லா இருக்கும். உங்களால முடியும்’’னு அப்பா சொன்னார். அதே மாதிரி மூவ் மென்ட்ஸை அவர் ஸ்டைல்ல பண் ணினார் ரஜினி சார்.

‘‘என்ன.. பிரபு நல்லா இருக்கா, நல்லா இருக்கா?’’ன்னு இடையில என் னிடம் கேட்டுப்பார். ‘‘சூப்பரா இருக்கு சார்’’னு நானும் சொல்வேன்.

‘‘என்னப்பா, என்னென்னமோ பண்ண வைக்கிற. நானும் நீ சொன்னபடியே ஆடுறேன்’’ன்னும் சொல்வார்.

டைரக்டர், கேமராமேன் கூட அவரோட புது ஸ்டைல் ஆஃப் டான்ஸை பார்த்துட்டு, ‘‘சூப்பரா இருக்கு சார்’’ன்னு சொல்வாங்க.

‘‘அப்படியா, அப்படியா?’’ன்னு கேட்டு ஜாலியாயிடுவார் ரஜினி சார்.

‘மாப்பிள்ளை’ படம் ரிலீஸ். கமலா தியேட்டர்ல பார்த்தேன். ரஜினி சார் நடந்தா கைத்தட்டல், நின்னா கைத்தட்டல்னு பறக்குற நேரத்துல ‘உனை தான் நித்தம்… நித்தம்’ பாட்டு வந்துச்சு. ரசிகர்கள் எழுந்து நின்னு ஆட ஆரம்பிச்சிட்டாங்க. கைத்தட்டல்ல தியேட்டரே கிழியுது. அதுலேயும் சட்டையை கிழிச்சுக்கிட்டு ஆடுறாங்க. பாட்டு முடிஞ்சதும் ஒன்ஸ்மோர் கேட்டு ஒரே சத்தம். திரும்ப அந்தப் பாட்டு வர்ற வரைக்கும் ரசிகர்கள் விடவே இல்லை. ரஜினி சார்கூட அமலா மேடமும் ஆடியிருப்பாங்க. அவங்க சூப்பர் டான்ஸர். தியேட்டர்ல கிடைச்ச அந்த ரியாக்‌ஷன் என் கேரியருக்கு ரொம்பவும் தெம்பா இருந்துச்சு. ‘அக்னி நட்சத்திரம்’ படத்துல பண்ண மாதிரி தப்பு பண்ணல, நாம சரியான ரூட்லதான் போயிருக்கோம்னு தெரிஞ்சுது.

ஏவி.எம் ஸ்டுடியோவுல ரஜினி சாரோட இன்னொரு படம் ஷூட்டிங். அப்பா ஈவ்னிங் 6 மணிக்கே வெளியூர் போக வேண்டியிருந்ததால் ‘‘என் பையன் பிரபு வந்துடுவான்!’’ன்னு சொல்லிட்டு புறப்பட்டார். நான் அன்னைக்கு லூஸா பேண்ட் போட்டுட்டு, முடி எல்லாம் ஸ்டைலா வெட்டிட்டு பார்க்க கொஞ்சம் வித்தியாசமா ஷூட்டிங்குக்கு போனேன். ஸ்டுடியோ வாசல்ல வாட்ச்மேன என்னை தடுத்து நிறுத்தி, ‘‘தம்பி நில்லு. எங்கே பொறே?’’னு கேட்டார்.

‘‘உள்ளே போகணும்’’னு சொன்னேன்.

‘‘ஷூட்டிங்ல்லாம் பார்க்க முடியாது. கிளம்பு’’ன்னு திரும்பச் சொன்னார். ‘‘இல்லைங்க… நான் போனாதான் ஷூட்டிங்கே நடக்கும்’’னு சொன்னேன். ‘‘நீ வேற, விளையாடாதப்பா! கிளம்பு’’ன்னு உள்ளே விடவே இல்லை. நானும் அவர்கிட்ட, ‘‘எனக்காகத்தான் உள்ள எல்லாரும் வெயிட் பண்றாங்க சார்’’ன்னு சொன்னேன். அவர் அதை கேட்கவே இல்லை. அப்போ, செட்ல இருந்து வெளியே வந்த ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் என்னை பார்த்துட்டு, ‘‘என்ன பிரபு... உள்ள வாங்க. சார் எல்லாம் உங்களுக்காகத்தான் வெயிட்டிங்’’ன்னு ஓடி வந்தார். அப்புறம்தான் உள்ளே போனேன். அன்னைக்கு மாஸ்டர்னு நம்பவே முடியாத வயசுல இருந்தேன்.

ரஜினி சாரோட ‘தளபதி’ படத்துக்கும் அப்பாதான் மாஸ்டர். அதுலயும் நான் அசிஸ்டென்ட். அதிகாலை 3 மணிக்கு மைசூர் பக்கத்துல மேல்கோட்டையில ‘ராக்கம்மா கையைத் தட்டு’ பாட்டுக் காட்சியைப் படம்பிடிக்க கிளம்புறோம். சாதாரணமா டைரக்‌ஷன்ல ‘ஸ்டார்ட் ஆக்‌ஷன் - கட்’ ன்னு சொல்வோம். ஆனா, பாட்டு சீன் எடுக்கிறப்போ, ‘சவுண்ட் - சவுண்ட் கட்’ ன்னு சொல்ல மாட்டோம். விசிலடிச்சா பாட்டு போடுவாங்க. திரும்ப விசிலடிச்சா நிறுத்திடுவாங்க. அந்த டைம்லதான் நான் முதன்முதலா விசில் அடிக்கவே கத்துக்கிட்டேன். ரஜினி சார், மணி சார், இளையராஜா சார், கேமராமேன் சந்தோஷ் சிவன் சார், ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி சார், அப்பான்னு பல ஜாம்பவான்களோட கூட்டணியில் வந்த ஆல் டைம் ஒன் ஆஃப் தி பெஸ்ட் சாங் அது!

ரஜினி சார் ரெண்டு கையாலயும் சொடக்கு போட்டுட்டே ஸ்டெப் போடுவார். அதை பார்த்துட்டு ஷோபனா மேடம், ‘வாவ்… ரஜினி சார் கலக்கு றாரே. சூப்பரா ஆடுறாரே…’ன்னு சொன் னாங்க. ரஜினி சார் ஒரு பாட்டு ஆரம் பிக்கும்போது கொஞ்சம் டென்ஷனா இருப்பார். போகப் போக ஜாலியாயிடு வார். ஒரு கட்டத்துல, ‘‘என்னோட பாடி லாங்க்வேஜ் என்னென்னு பிரபுவுக்கு தெரியும். அவன் பார்த்துப்பான்’’ன்னு அவரே சொல்வார்.

ஒரு தடவை ‘சிவாஜி’ படத்துல வர்ற ‘ஒரு கூடை சன் லைட்’ பாட்டோட ரிகர்ஷல்ல ரஜினி சார்கிட்ட, ‘‘இந்த மூவ்மெண்ட்ஸ் எல்லாம் நல்லா பண்றீங்க. பீஜியம்ல வர்ற ஒரு இடத்துல மட்டும் கவனமா பண்ணிட்டா பாட்டு இன்னும் பெட்டரா வந்துடும் சார்’’ன்னு சொன்னேன். அதுக்கு ரஜினி சார், ‘‘ஓ…அப்படியா, அப்படியா?’ன்னு கேட்டுட்டார். அப்புறமா டைரக்டர் ஷங்கர்கிட்ட, ‘‘உடம்பு சரியில்லைன்னு மாத்திரை சாப்பிடுறப்ப குரங்கைப் பத்தி நினைக்காதீங்கன்னு சொன்னா, எப்படி நினைக்காம இருக்க முடியும். கண்டிப்பா அது ஞாபகம் வரத்தானே செய்யும். அந்த மாதிரிதான் இந்தப் பாட்டு பண்ணிட்டிருக்குறப்ப பீஜியம்ல மட்டும் பெட்டரா பண்ணிடணும்னு பிரபு பயமுறுத்துறான். அப்படி அவன் சொன்னதுலேர்ந்தே எனக்கு அது ஞாபகமாவே இருக்கு’’ன்னு அவர் ஸ்டைல்ல சொன்னார். அதைக் கேட்டுட்டு ஷங்கர் சார் சிரிச்சுட்டார்.

ஸ்பெயின்ல ஷூட்டிங். ஒரு நாள் ராத்திரி எட்டு, ஒன்பது மணி இருக்கும். நான் ரூம்ல என் டான்ஸ் அசிஸ்டென்ட் விஷ்ணுவோட பேசிட்டிருந்தேன். திடீர்னு பெல் அடிச்சுது. விஷ்ணு போய் கதவை திறந்தவன், அப்படியே ‘‘சார்… சார்…’’னு பயங்கரமா குனிஞ் சான். என்ன இவன் இப்படி குனியிறானேன்னு பார்த்தேன். உடனே அவன் என்னைப் பார்த்து, ‘‘சார்.. சாரு… சார் சாரு…’’ன்னு சொன்னான். என்ன ஆச்சு இவனுக்குன்னு நினைக்கும் போதே ரஜினி சார் அறைக்குள்ள வந்துட்டார். நானும் டக்குன்னு எழுந்திருச்சுட்டேன். ‘‘பிரபு கொஞ்சம் விஷ்ணுவை அழைச்சுட்டுப் போய் ரிகர்ஷல் பண்ணிக்கட்டுமா?’’ன்னு கேட்டார். ‘‘சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே சார்’’ன்னு சொன்னேன். ‘‘பரவாயில்லை பிரபு. நீங்க படுங்க… நீங்க படுங்க. நான் இவரோட ரிகர்ஷல் பண்ணிக்கிறேன்’’ன்னார்.

‘‘நான், வரேன் சார்!’’ன்னு சொன் னேன். ‘‘வேணாம்.. வேணாம். நீங்க ரிலாக்ஸ் பண்ணுங்க!’’ன்னு சொல் லிட்டு விஷ்ணுவை கூட்டிட்டு போய்ட்டார். இது, ‘பீஜியம்ல கவனமா பண்ணணும் சார்’னு நான் சொன் னேன்ல… அதுக்கான எஃபெக்ட். எவ்ளோ பெரிய ஆளு. அவர் போன் செய்தோ, இல்ல ஒரு அசிஸ்டென்டை விட்டோ கூப்பிட்டிருக்கலாம். ஆனா, அவரே வந்து பெல் அடிச்சு, வெயிட் பண்ணி உள்ளே வந்து, என்கிட்ட பர்மிஷன் கேட்டு…. என் அசிஸ்டென்டை கூப்பிட்டுப் போனது என் வாழ்க்கைக்கு ஒரு பாடமா இருந்துச்சு.

பெரிய ஆளுங்க எப்பவும் சாதார ணமா பண்ணிடுறாங்க. ஆனா, அது இன்னும் உங்கக்கிட்டல்லாம் பகிர்ந்துக் குற அளவுக்கு எனக்கு ஆழமாக பதிஞ் சிருக்கு பாருங்க.

அந்தப் பாட்டுக்கு லண்டன்லேர்ந்து நிறைய டான்சர்ஸை ரெடி பண்ணி யிருந்தார், ஷங்கர் சார். அதில் சில டான்சர்ஸ் தெனாவட்டா இருந்தாங்க. பாட்டோட ஷூட்டிங்லயும் சரியா கவனம் செலுத்துறதில்ல. எப்போ பார்த்தாலும் கிண்டல் பண்ணிட்டே இருந்தாங்க. முதல் நாள், ரெண்டாம் நாள் போகட்டும்னு விட்டேன். தொடர்ந்து கலாட்டாவுலயே இருந்தாங்க. ஒரு கட்டத்துல என்னால பொறுமையா இருக்க முடியலை. ஆனா, நாலாவது நாள்?

- இன்னும் சொல்வேன்…

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x