Last Updated : 20 Nov, 2015 04:49 PM

 

Published : 20 Nov 2015 04:49 PM
Last Updated : 20 Nov 2015 04:49 PM

முதல் பார்வை: ஒரு நாள் இரவில் - சத்யராஜ் சிறப்பு

மலையாளத்தில் ஹிட்டடித்த 'ஷட்டர்' படத்தின் ரீமேக், எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் உருவான முதல் படம், 'பாகுபலி'க்குப் பிறகு சத்யராஜ் நடிப்பில் வெளியாகும் படம் என்ற இந்த காரணங்களே ஒரு நாள் இரவில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.

படம் எப்படி?

கதை: டீன் ஏஜ் மகள் ஒழுக்கத்தில் கறார் காட்டும் அப்பா, ஒரு கட்டத்தில் தானே அந்த ஒழுக்கக்கேடான செயலில் இறங்குகிறார். அது எது? ஏன்? அதற்குப் பிறகு என்ன ஆகிறது? என்பது மீதிக் கதை.

மலையாளத்தில் உருவான 'ஷட்டர்' படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, விருதும் வென்றிருக்கிறது. அந்தப் படத்தை தமிழில் உருவாக்கி இயக்குநராக புரமோஷன் ஆகியிருக்கும் எடிட்டர் ஆண்டனியை லைக் செய்யலாம்.

த்ரில்லர் படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் சத்யராஜ்.

கறாரான அப்பா, கண்டிப்பான கணவன், சின்னதாய் தோன்றும் சபல எண்ணத்திலும் மோகம் காட்டாத முகம், பதற்றம், பரிதவிப்பு, குழப்பம், பயம், அழுகை, சந்தேகம், யோசனை என அனைத்து உணர்வுகளையும் கண்முன் நிறுத்துகிறார்.கதாபாத்திரத்தின் தேவையறிந்து அதை உணர்வுபூர்வமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

பாசாங்கு இல்லாத இயல்பான நடிப்பில் அனு மோல் ஈர்க்கிறார். யூகி சேது, ஆட்டோ டிரைவராக வரும் அறிமுக நடிகர் வருண், சத்யராஜ் மகளாக நடித்திருக்கும் தீக்‌ஷிதா கோத்தாரி, சத்யராஜ் மனைவியாக நடித்த கல்யாணி நட்ராஜன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

ரெண்டு படிப்பு இருக்கு. பட்டப்படிப்பு... பட்டபின் படிப்பு என்ற யூகி சேதுவின் வசனங்கள் சிம்பிளாய் வசீகரிக்கின்றன.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், நவீனின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். பல படங்களுக்கு கத்தரி போடும் ஆண்டனி அந்த ஒரு பாட்டுக்கும் யோசிக்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.

ஜாய் மேத்யூ கதையை ஆண்டனியின் திரைக்கதை ஆக்கிய விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். சத்யராஜ் புரிதலில் உள்ள பிரச்னை, நண்பர்களின் ரியாக்‌ஷன்கள் தெரிந்தும் அதுகுறித்த ஃபினிஷிங் இல்லாதது குறை. அனு மோல் பின்னணி தெரிந்த பிறகு எந்த பதற்றமும் இல்லாமல், அலட்டாமல் சாதாரணமாக யூகி சேது இருப்பது நெருடல்.

அந்தச் சிக்கலான சூழ்நிலையை சத்யராஜ் எப்படி கடந்து வரப் போகிறார்? என்பதுதான் திரைக்கதையின் மிகப் பெரிய யுத்தி. ஆனால், அதில் எந்த பதற்றத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை. இதைத் தவிர்த்துப் பார்த்தால் 'ஒரு நாள் இரவில்' ஒரு முறை பார்க்க வேண்டிய சினிமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x