'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்திலிருந்து நூலிழையில் தப்பித்தேன்: கமல் 

'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்திலிருந்து நூலிழையில் தப்பித்தேன்: கமல் 
Updated on
1 min read

'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்திலிருந்து நூலிழையில் தப்பித்தேன் என்று கமல் தெரிவித்தார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 19) இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாகப் பலரும் தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், இது தொடர்பாக பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது என்று கூறாமல், 'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் தானும் நூலிழையில் தப்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல் பேசும்போது, "விபத்துக்கு ஏழை, பணக்காரன் தெரியாது. அது ஒரு சுனாமி மாதிரி. இந்த அறைக்குள் நானும் இன்று இருந்திருக்கக் கூடும். அவ்வளவு நூலிழையில் உயிர் தப்பிய கதைதான் நடந்தது. 4 நொடிகளுக்கு முன்பு இயக்குநர் தள்ளிப் போய்விட்டார். ஒளிப்பதிவாளரும் தள்ளிப் போய்விட்டார்.

எந்த கூடாரம் நசுங்கியதோ, அதற்குள் நானும் நாயகியும் இருந்தோம். 2 அடி வேறொரு பக்கம் இருந்திருந்தால், எனக்குப் பதில் வேறொருவர் இங்கு பேசிக் கொண்டிருப்பார். ஆகவே, விபத்துக்கு ஏழை, பணக்காரன் தெரியாது. பயந்துபோய் இதைச் சொல்லவில்லை. இது நடக்க, நடக்க அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கிறேன்" என்றார் கமல்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in