

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் டாப்ஸி நடிக்கும் படம் ‘தப்பட்’. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. குடும்ப வன்முறை பற்றிப் பேசும் இப்படம் பிப். 28-ம் தேதி அன்று வெளியாகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து பிடிஐ நிறுவனத்துக்கு டாப்ஸி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
''சமீப ஆண்டுகளில் பாலின பேதம் என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன். உங்கள் தந்தை உங்களிடம் வெளியே போகக்கூடாது என்று கூறினால் நீங்கள் அதைக் கேள்வி கேட்கக் கூடாது. உங்கள் தாய் உங்கள் கருத்தோடு ஒத்துப்போனாலும் அது முக்கியமில்லை. நீங்கள் இரவு 8 மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கவேண்டும். ஏனெனில், ஆண்களால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது.
பாலின பேதங்களில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் ‘இது தவறு’ என்று சத்தமிடுவதன் மூலம் மட்டுமே மாற்றிவிட முடியாது. நீங்கள் செய்யும் வேலையின் மூலம் மக்கள் அவற்றை உணரத் தொடங்குகிறார்களா என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். நமக்கு அடுத்த தலைமுறை இந்த வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளாமல் போகலாம். ஆனால் அதற்கு அடுத்த தலைமுறை நிச்சயம் இதை உணர்வார்கள்.
சினிமா நடிகர்களைக் கடவுளாக வணங்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் நமது சக்தியை சரியான திசையில் பயன்படுத்த வேண்டும். மக்கள் நீங்கள் சொல்வதைக் கவனிப்பார்கள். அதை ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். இதுபோன்ற சக்தி நமக்குக் கிடைக்கும்போது அதை சரியான திசையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் சமூகப் பிரச்சனைகளைப் பேசும் ஓரிரண்டு படங்களில் நடித்தபோது மக்கள் அது குறித்துப் பேசுவதைக் கண்டேன். எனவே, எனக்குக் கிடைத்த இந்த சக்தியை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தேன்''.
இவ்வாறு டாப்ஸி தெரிவித்துள்ளார்.
'பிங்க்', 'சாந்த் கி ஆங்க்', 'முல்க்' உள்ளிட்ட பெண்ணுரிமை குறித்த படங்களில் டாப்ஸி தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.