

‘ஊழல், பிரச்சினைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் சுவாரசியமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார் குஷ்பு.
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடந்த 14-ம் தேதி ரிலீஸான படம் ‘நான் சிரித்தால்’. ராணா இயக்கிய இந்தப் படத்தில், ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார், படவா கோபி, முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி பாபு, ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி - குஷ்பு இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹிப் ஹாப் ஆதியின் படத்தை அவ்னி மூவிஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் வெற்றி விழா, நேற்று (பிப்ரவரி 18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய குஷ்பு, “விமர்சனம் செய்பவர்களுக்கு நன்றி. ஏனென்றால், அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போதுதான், அடுத்தமுறை இன்னும் பெட்டராக பண்ண வேண்டும் என்று தோன்றும்.
சிலருக்குப் படம் பிடித்திருக்கிறது, சிலருக்குப் பிடிக்கவில்லை. ஜனநாயகத்தின் அழகே அதுதான். எல்லோரும் ஒரே மாதிரி பேச ஆரம்பித்துவிட்டால் போரடிக்கும். கொஞ்சம் மைனஸ் இருக்க வேண்டும், கொஞ்சம் விமர்சனம் இருக்க வேண்டும், ஊழல் இருக்க வேண்டும், பிரச்சினைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் சுவாரசியமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க: