

மன்னிப்பு கேட்டால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்ப்போம் என்று ராதாரவி கூறியதை சின்மயி நிராகரித்துவிட்டார்.
இன்றுடன் (பிப்ரவரி 15) டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு மீண்டும் தேர்தல் நடத்த ஏற்கெனவே மனுத்தாக்கல் தொடங்கப்பட்டது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ராதாரவி மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து சின்மயி மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் சின்மயி உறுப்பினரே இல்லை என்று சின்மயி மனு நிராகரிக்கப்பட்டதால் மீண்டும் ராதாரவி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், மற்ற பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் இடத்தில் ராதாரவி அணிக்கு எதிராகப் போட்டியிடும் ராமராஜ்யம் அணிக்கு ஆதரவாக சின்மயி களமிறங்கினார்.
தேர்தல் நடைபெறும் இடத்துக்கு ராதாரவி - சின்மயி இருவருமே வந்ததால் பரபரப்பு உண்டானது. தன்னை உள்ளே கூட அனுமதிக்கவில்லை என்றும், காலையிலிருந்து தேர்தல் நடைபெறும் இடத்துக்கு வெளியே நிற்பதாகவும் சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்கள் மத்தியில் ராதாரவி பேசும்போது, "சின்மயி மன்னிப்பு கேட்டால் டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்ப்போம்" என்று தெரிவித்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் சின்மயி, "ராதாரவி காலில் விழுந்தோ அல்லது வீட்டுக்குச் சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது. சட்ட ரீதியாக இந்தப் பிரச்சினையைச் சந்திப்பேன்" என்றார்.
இதன் மூலம் ராதாரவி - சின்மயி இருவருக்கும் இடையே ஆன பனிப்போர் இப்போதைக்கு முடிவுக்கு வரவில்லை.
தவறவிடாதீர்!