

'நெற்றிக்கண்' ரீமேக் தொடர்பாக வெளியான செய்திக்கு தனுஷுக்கு, விசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1981-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'நெற்றிக்கண்'. இயக்குநர் விசுவின் கதைக்கு, கே.பாலசந்தர் திரைக்கதை அமைந்திருந்தார். இதில் லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்திருந்தனர்.
கவிதாலயா நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக தனுஷ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். தற்போது இதனை ரீமேக் செய்வதற்கான பணிகளில் தனுஷ் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை முன்வைத்து விசு தனது யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கதை உரிமைத் தொடர்பாக தனக்கு நடந்த அநீதிகளைப் பட்டியலிட்டுள்ளார். அதில் 'நெற்றிக்கண்' ரீமேக் பணிகள் தொடர்பாக தனுஷுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விசு.
அதில் விசு, "'நெற்றிக்கண்' படம் எப்படி ரஜினிக்கு ஒரு மைல்கல் படமாக அமைந்ததோ, அப்படியே உங்களுக்கு அமைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தனுஷ் அந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறீர்களா? அதன் உரிமையை கவிதாலயா நிறுவனத்திடமிருந்து வாங்கிவிட்டீர்களா?. அந்தப் படத்தின் கதை, திரைக்கதையாளன் நான். அதை உங்கள் மாமனாரிடம் கேளுங்கள் சொல்வார். அதில் நடித்தவர்கள் அனைவரிடமும் கேளுங்கள் சொல்வார்கள்.
அந்தப் படத்தில் 4 தூண்களாக வேலை பார்த்தவர்கள் எஸ்.பி.முத்துராமன், இளையராஜா, பிரமிட் நடராஜன் மற்றும் நான். எனக்குத் தெரியாமல் எப்படி வாங்கியிருக்கலாம்?. நீங்கள் ஒரு வேலை படத்தைத் தொடங்கினால், வழக்கு போட்டுவிட்டால் என்ன விசு சாரே இப்படிப் பண்ணிட்டார் என நினைக்க வேண்டாம். 1981-ம் ஆண்டிலிருந்து எங்க அப்பா உங்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தாரோ என்று நீங்கள் சொல்லக் கூடாது" என்று தெரிவித்துள்ளார் விசு.
இந்த வீடியோ பதிவால் 'நெற்றிக்கண்' ரீமேக் பணிகள் இனிமேல் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவறவிடாதீர்