Published : 14 Feb 2020 05:28 PM
Last Updated : 14 Feb 2020 05:28 PM

விஜய் வீட்டில் வருமானவரி சோதனை, விஜய் சேதுபதி மதமாற்ற சர்ச்சை குறித்து சீமான் கருத்து

விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறித்தும், விஜய் சேதுபதி மதமாற்றம் செய்யப்பட்டார் என்ற சர்ச்சை குறித்தும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் சீமான்.

சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதுபோல, திரைத்துறையில் அரசியல் தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அத்துடன், அதுகுறித்துப் பேசிய விஜய் சேதுபதி மதமாற்றம் செய்யப்பட்டார் என்ற சர்ச்சையும் கிளம்பியது.

இந்தச் சம்பவங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

‘விஜய் சேதுபதி மதமாற்றம் செய்யப்பட்டார்’ என்ற சர்ச்சை குறித்த கேள்விக்கு, “வழிபாட்டை ஏற்பதும், மதம் எனும் வழித்தடத்தை ஏற்பதும் தன் விருப்பம். அதில் நாம் கருத்து சொல்ல முடியாது. நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் விதிக்கக் கூடாது. நான் எந்த மாதிரி உடை உடுத்த வேண்டும், எப்படி தலைவாரிக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது. எனவே, அது தம்பி விஜய் சேதுபதியின் சொந்த விருப்பம்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, “விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது, அச்சப்படுத்துவதுதான். ரஜினிக்கு வரிச்சலுகை கொடுக்கிறீர்கள். அதேநேரம் தம்பி விஜய் வீட்டில் சோதனை போடுகிறீர்கள். உங்களுக்கு வேண்டியவர் என்றால் விட்டுவிடுகிறீர்கள். விஜய்க்கும் அரசியல் ஆர்வம் இருப்பதால், அவரைத் தட்டிவைக்க நினைக்கிறீர்கள். அப்போதுதான் ரஜினியை வளர்த்துவிட முடியும். அவருக்கு இடையூறாக விஜய் வந்துவிடக்கூடாது. அதுதானே உங்கள் கணக்கு.

இதே பிரச்சினைதானே அம்மையார் சசிகலாவுக்கும். அவரை விசாரிக்க வேண்டும், தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் ரஜினி உங்களுடைய ஆள், சசிகலா எங்களுடைய ஆள் என்றாகிவிடுகிறது” என்றவரிடம், ‘ரஜினி பாஜக ஆள் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? தன்மீது யாரும் காவிச்சாயம் பூசமுடியாது என ரஜினி கூறியிருக்கிறாரே...’ என்ற கேள்விக்கு, “யாரும் பூசமுடியாது. அவரேதான் தன்மீது பூசிக் கொண்டாரே... அதன்மீது மறுபடி நாம் எப்படிப் பூசுவது? ஏற்கெனவே வெள்ளையடித்த சுவற்றில் மறுபடி வெள்ளையடிக்க நான் என்ன வேலையத்தவனா?” எனப் பதில் அளித்துள்ளார் சீமான்.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x