’சூரரைப் போற்று’ படம் சிறந்த தருணம்: சூர்யா
'சூரரைப் போற்று' படம் ஒரு சிறந்த தருணம் என்று இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யா பேசினார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
இந்தப் படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் பற்றிய படம் என்பதால், முதல் பாடலை விமானத்தில் வெளியிட முடிவு செய்தனர். இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் அனுமதி பெற்று, ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பாடல் வெளியீட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது சூர்யா பேசும் போது, "யார் என்ன கண்டுபிடித்தாலும், அது மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கவில்லை என்றால் அதற்கு அர்த்தமே இல்லை. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே விமானத்தில் பறக்க முடிந்தது. அப்போது தான் ஜி.ஆர் கோபிநாத் சார் வந்து ஒட்டுமொத்தமாகவே இந்தத் துறையை மாற்றினார். சாதாரண மக்களும் விமானத்தில் பறக்கும் வண்ணம், 1 ரூபாய்க்கு பறக்க வைத்தார். அதற்கு எவ்வளவு மாற்றங்கள் செய்திருப்பார் என நினைத்துப் பாருங்கள்.
அந்த கதையைப் படமாக்கியுள்ளார் சுதா கொங்காரா. அதற்காக 10 ஆண்டுகள் உழைத்திருக்கிறார். அது சாதாரண விஷயமல்ல. என்ன வேண்டுமானாலும் கதை எழுதி, அதைத் திரையரங்கில் பார்த்து மகிழும் வண்ணம் எடுக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் சுமார் 30 நிமிடங்கள் விமானக் காட்சிகள் இருக்கிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இல்லையென்றால், அதற்குச் சாத்தியமில்லை.
இந்தக் கதையை சுதாவினால் மட்டுமே பண்ண முடிந்தது. என்னுடைய 20 வருடத் திரையுலக வாழ்வில், படப்பிடிப்பு தளத்தில் இந்தப் படம் தான் சிறந்த தருணம் என்று சொல்வேன். இந்தப் படத்துக்காக என்ன பாராட்டுக் கிடைத்தாலும், அது சுதாவையே சேரும். இது முழுக்க அவருடைய படம் தான். அவர் எனக்குச் சகோதரி என்றாலும், சிறந்த பரிசை விட முக்கியமான ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் மோகன்பாபு எனக்கு காட்பாதர் மாதிரி. அவருடன் வரும் காட்சிகள் எல்லாம் ஹைலைட்டாக இருக்கும்” என்று பேசினார் சூர்யா.
தவறவிடாதீர்
