

சத்யம் திரையரங்க நிர்வாகத்துக்கு, 'ஓ மை கடவுளே' படத்தின் ஒளிப்பதிவாளர் விது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் முக்கியமான திரையரங்குகளில் ஒன்று சத்யம் திரையரங்கம். தமிழ்த் திரையுலகின் முக்கியமான பிரபலங்கள் அனைவருமே இந்தத் திரையரங்கில்தான் படம் பார்ப்பார்கள். அதுமட்டுமன்றி, ஒலி அமைப்பு, திரை வடிவமைப்பு என அனைத்திலுமே இந்தத் திரையரங்கம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
நாளை (பிப்ரவரி 14) வெளியாகவுள்ள 'ஓ மை கடவுளே' படத்தின் ஒளிப்பதிவாளர் விது, சத்யம் திரையரங்கத்தின் திரை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "சத்யம் திரையரங்கின் பெரிய திரையில், திரையிடுதல் தரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
எனது சமீபத்திய படம் 'ஓ மை கடவுளே'வின் பிரத்யேகக் காட்சி நேற்றிரவு நடந்தது. 40 சதவீதத்துக்கும் மேலாக வண்ணங்கள் மங்கிப் போயிருந்தன, துல்லியம் குறைவாக இருந்தன. சம்பந்தப்பட்ட நிர்வாகிகளே, சிறந்த படம் பார்க்கும் அனுபவத்தை எங்களுக்கு மீட்டுக் கொடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் விது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு டீஸர், ட்ரெய்லர் மூலமாக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், சத்யம் திரை குறித்துக் கூறியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் சிறு சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
தவறவிடாதீர்!