Published : 13 Feb 2020 11:07 AM
Last Updated : 13 Feb 2020 11:07 AM

'சைக்கோ' ஒரு படமா? 'பாரம்' தான் படம்: மிஷ்கின் கலகலப்பான பேச்சு

'சைக்கோ' ஒரு படமா? 'பாரம்' தான் படம் என்று இயக்குநர் மிஷ்கின் கலகலப்பாகப் பேசினார். மேலும், தனது பேச்சில் பலரையும் கிண்டல் செய்து சுவராசியப்படுத்தினார்.

ப்ரியா கிருஷ்ணாசுவாமி இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளியாகவுள்ள படம் 'பாரம்'. இது 66-வது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதினை வென்றது. இந்த விருதினைப் பெறும் வரை, இப்படியொரு படம் தயாராகி இருப்பது பலருக்கும் தெரியாது.

தற்போது இந்தப் படத்தினை பிப்ரவரி 21-ம் தேதி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், மிஷ்கின், ராம், ப்ரியா கிருஷ்ணசுவாமி மற்றும் 'பாரம்' குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின் மிகவும் சுவாரசியமான முறையில் கலகலப்பாகப் பேசினார்.

அந்தப் பேச்சு முழுமையாக:

''ராம் அழைத்ததால் படம் பார்க்கப் பயங்கர தலைவலியுடன் போனேன். சிலர் படம் பார்த்துவிட்டு, பிடிக்கவில்லை என்றால் 'நல்ல முயற்சி', 'வித்தியாசமான எண்ணம்' என்பார்கள். இந்த இரண்டு வார்த்தையைத் தவிர எதுவுமே தெரியாது. அப்படி வித்தியாசமாக யாராவது எண்ணிப் படம் எடுத்திருந்தால், படம் ஓடவே ஓடாது. 'பாரம்' பார்த்துவிட்டு இந்த மாதிரி என்ன சொல்லலாம் என்று எண்ணிக் கொண்டே வந்தேன்.

ப்ரியாவின் உடைகளைப் பார்த்துவிட்டு, இவருக்குப் படமே எடுக்கத் தெரியாது என முடிவு பண்ணினேன். ராம் சொல்லிட்டானே என்று வந்தேன். ராம், வெற்றிமாறன் இருவருமே எதையோ பார்த்து மயங்கிவிட்டார்கள் என நினைத்தேன். 'சித்திரம் பேசுதடி' படம் வெற்றியடைந்ததால்தான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு கலைஞனுடைய வாழ்க்கை எதிர்பார்ப்பில்தான் தொடங்குகிறது. ஆனால், 'பாரம்' படம் பார்த்தவுடன் தலைவலி போய்விட்டது. என்னைச் செருப்பைக் கழட்டி அடித்த மாதிரி இருந்தது.

'சைக்கோ' ஒரு படமா?

அதற்கு இரண்டு விஷயங்கள் உண்டு. முதல் விஷயம்... என்ன படம் எடுக்கிறோம் என நினைத்தேன். இப்போது 'சைக்கோ' படம் எடுத்து, ஏதோ ஓடியிருக்கு எனச் சொல்கிறார்கள். அதுவொரு படமா?. 'பாரம்' தான் படம். இரண்டாவது விஷயம். உன் அப்பா, அம்மாவைப் பார்த்து எவ்வளவு நாளாச்சுடா என்று எனக்குள் கேட்டேன். மாதந்தோறும் பணம் அனுப்பிவிடுகிறேன். ஆனால், கூட இருந்து பண்ணவில்லையே என்ற கவலையாகிவிட்டது.

எங்கப்பா தான் என்னை முதலில் சைக்கிளில் 'Enter The Dragon' படத்துக்குக் கூட்டிட்டுப் போனார். படம் முடிந்தவுடன் நல்லாயிருக்குப்பா என்றேன். உடனே திரும்பவும் தியேட்டருக்குள் கூட்டிட்டுப் போனார். அவர்தான் எனக்கு முதலில் சினிமா கற்றுக் கொடுத்தார். இந்தப் பத்திரிகையாளர்கள் 'பாரம்' படத்தை பெரும் வெற்றிப் படமாக்குவார்கள். ஏனென்றால், நமது அப்பா - அம்மாவை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிற படம் இது.

ப்ரியா காலில் விழுந்திருப்பேன்

இந்த வாழ்க்கையில் அப்பா - அம்மாவை விட வேறு என்ன இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு நல்ல படம் மனதைக் கழுவுகிறது. ஒரு கெட்ட படம் என்ன செய்கிறது என்றால் நடனமாடிவிட்டுப் போய்விடுகிறது. இந்தப் படம் பார்த்துவிட்டு நான் தண்ணியடிக்கவில்லை. அப்படி அடித்திருந்தால், ப்ரியா வீட்டுக்குப் போய் காலில் விழுந்திருப்பேன். என்னம்மா இப்படியொரு படம் எடுத்துட்ட? என்று கேட்டிருப்பேன். எங்களை எல்லாம் மூதேவி ஆக்கிட்டியே எனவும் சொல்லியிருப்பேன்.

தமிழ் சினிமாவில் 100 ஆண்டுகள் கழித்து முக்கியமான 10 படங்கள் எடுத்தால், அதில் ஒரு படம் இதுவாக இருக்கும். ’பேரன்பு’, 'அசுரன்','சைக்கோ' இந்த மூன்றைச் சேர்த்தால் வரும் படத்தை விட 'பாரம்' நல்ல படம். அந்த அளவுக்கு நல்ல படம் என்றால் ஏதாவது பாட்டு, மேட்டர் எல்லாம் இருக்கா என்று கேட்பார்கள். அல்லது ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்வார்கள்.

'சைக்கோ' பல முறைபார்த்தால் பிரச்சினை

ஏன்டா.. ஒரு முறை படம் பார்க்க தியேட்டருக்குப் போகிறீர்கள். அங்கு போய் என்ன குடும்பம் நடத்தவா போகிறீர்கள். ஒருவன் என்னிடம் வந்து 'சைக்கோ' எத்தனை முறை பார்த்தேன் தெரியுமா என்று சொல்லத் தொடங்கினான். உடனே நிறுத்துப்பா போதும் என்றேன். ஏனென்றால் என ஆரம்பிக்கும்போது உனக்கு வேலையில்லை எனத் தெரிகிறது. ஒரு முறை பார்ப்பதைத் தவிர அந்தப் படத்தில் வேறொன்றுமே இல்லை. அதைப் பார்த்தாலே பிரச்சினையாகிவிடும். அதை ஏன் நீ 4 முறை பார்த்தாய். உடனே மருத்துவரிடம் செல் என்றேன்.

10 ஆண்டுகளில் கார், வீடு என வாங்கிவிட வேண்டும் என முன்னோக்கிப் போய்க் கொண்டே இருக்கிறோம். ஆனால், நமக்கு வாழ்க்கை கொடுத்த தாய் - தந்தை எங்கேயோ இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் எல்லாம் என்னடா படம் பண்ணுகிறீர்கள் என்று சொல்வீர்கள். கண்டிப்பாகச் சொல்லுங்கள் என்கிறேன். இந்தப் படம் ஒரு பாரம் அல்ல. ஒரு பூவின் இதழில் உள்ள பாரம். ரொம்ப நாகரிகமான படம்.

நடிகர்கள் மீதான கிண்டல்

நிஜமாகவே கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பார்கள். எந்த நடிகனாவது கேரக்டரில் வாழ முடியுமா? அப்படி ஒரு வெங்காயமும் கிடையாது. அப்படி யாராவது என் படத்துக்குச் சொன்னால் உடனே வெளியே போ என்று சொல்லிவிடுவேன். திருடன் என்றால் உடனே பக்கத்து வீட்டில் போய் திருடிவிடுவார்களா? ஒரு காட்சியில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றால், இந்தக் காட்சிக்கு புனேவில் ஒரு காஸ்ட்டியூம் பார்த்தேன். அதைப் போட்டால் தான் சரியாக இருக்கும் என்பார்கள்.

இந்த நாடும், நகரமும் அப்பா - அம்மாவிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்தவுடன் என்னை எல்லாம் அப்பா - அம்மாவிடமிருந்து பிரித்துவிட்டது. 20 வருட சினிமா என்னை அப்பா - அம்மாவிடமிருந்து பிரித்துவிட்டது. என்னைக் கெட்டவார்த்தையில் கூட திட்டிக் கொள்ளுங்கள். ஆனால் இந்தப் படத்தைப் பாருங்கள்.

'சைக்கோ' ஜெயித்துவிட்டது என்கிறார்கள். அடுத்த படம் என்ன பண்ணப் போகிறேன் என்று தெரியவில்லை. தோற்றிருந்தால் கூட அடுத்து ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் வரும். ஜெயித்துவிட்டால் என்ன திருட்டுத்தனம் பண்ணியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. மறுபடியும் ஒரு குத்துப்பாட்டு இறக்கி விடுவோமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

தேசிய விருதுக்கு நல்லது!

இந்தப் படம் ஜெயிக்கும் என நினைத்த படமெல்லாம் தோற்றுவிட்டது. அப்படி நினைக்காத படம்தான் ஓடியிருக்கிறது. இந்தப் படத்துக்கு எத்தனை போஸ்டர்கள் அடித்துள்ளீர்கள் எனக் கேட்டேன். அதற்கு காசில்லை என்றார்கள். என் சொந்த காசில் 200-300 போஸ்டர்கள் அடிக்கலாம் என்று இருக்கிறேன். அதை 6 - 7 நகரங்களிலாவது ஒட்ட வேண்டும் என நினைத்துள்ளேன். நானும் ராமும் வேலையில்லாமல் இருப்பதால் போஸ்டர் ஒட்டுவோம். வெற்றிமாறன் பிஸியாக இருக்கிறான். இப்படி போஸ்டர் ஒட்டுவதைத்தான் இந்தப் படத்துக்கு நான் செய்யும் நன்றிக் கடனாகப் பார்க்கிறேன். இந்தப் படத்துக்குத் தேசிய விருது கொடுத்தது, தேசிய விருதுக்கு நல்லது''.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x