

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். பிப்ரவரி 21-ம் தேதி வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. தற்போது விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தனுஷின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திக் நரேன். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தையும் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளார் கார்த்திக் நரேன்.
தற்போது இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஃபியா' படத்தில் வில்லனாக நடித்துள்ளார் பிரசன்னா. அதே போல் தனுஷ் இயக்கி நடித்த 'பா.பாண்டி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரசன்னா. கார்த்திக் நரேன் - தனுஷ் இருவருக்குமே நண்பர்களாக இருக்கும் பிரசன்னா இந்தப் படத்தில் கண்டிப்பாக ஒப்பந்தமாவார் என்கிறார்கள்.
தவறவிடாதீர்