

'கபாலி', 'தர்பார்' படத்தைப் போலவே விமானத்தில் விளம்பரப்படுத்த உள்ளது 'சூரரைப் போற்று' படக்குழு.
தமிழ்த் திரையுலகில் விமானத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட முதல் படம் ரஜினி நடித்த 'கபாலி'. தாணு தயாரித்த அந்தப் படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' படமும் விமானத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படத்தை விமானத்தில் விளம்பரப்படுத்தவுள்ளார்கள். இதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். 'சூரரைப் போற்று' விளம்பரத்துடன் கூடிய விமானத்தை பிப்ரவரி 13-ம் தேதி, ஸ்பைஸ் ஜெட் தலைவர் அஜய் சிங் அறிமுகப்படுத்துகிறார்.
அந்த விமானத்தில் பறந்து கொண்டே படக்குழுவினர் நடுவானில், 'வெய்யோன் சில்லி' பாடலை வெளியிடவுள்ளது படக்குழு. அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளனர். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவி உருவாகியுள்ள படம் என்பதால், இந்த முறையில் விளம்பரப்படுத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறைக்கு இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.
தவறவிடாதீர்