

எந்தவொரு பெரிய உள்நோக்கத்துடன் நடிகர்கள் அரசியல் பேசுவதில்லை என்று பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
'தர்பார்' நஷ்டம் என விநியோகஸ்தர்கள் போராட்டம், விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மற்றும் 'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம் ஆகிய பிரச்சினைகள் தற்போது தமிழ் திரையுலகத்தை ஆட்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேல் குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று (பிப்ரவரி 8) காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது 'தர்பார்' படம் நஷ்டம் தொடர்பாகப் பேசி வரும் விநியோகஸ்தர்களையும், பாஜக கட்சியினருக்கும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
அப்போது பத்திரிகையாளர்கள் "நடிகர்கள் அரசியல் பேசுவதால் தான் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுகிறதா" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஆர்.கே.செல்வமணி "நடிகர்கள் ஏதோ ஒரு சமயத்தில் கருத்துச் சொல்வார்கள். அதை சினிமாவில் வரும் கருத்து மாதிரி எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லாமல் போய்விடும்.
எந்தவொரு பெரிய உள்நோக்கத்துடன் நடிகர்கள் அரசியல் பேசுவதில்லை. ஒரு கலைஞனாக சில சமயத்தில் கோபம் வரும் போது பிரதிபலிப்பார்கள். நிறைய விழாக்களில் அரசியல் தலைவர்களைப் பாராட்டுகிறார்களே. அதை எடுத்துக் கொள்வது போல், விமர்சனத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று பதிலளித்துள்ளார் ஆர்.கே.செல்வமணி
தவறவிடாதீர்: