டெல்லி தேர்தலில் வாக்களித்தது தவறா? - தாப்ஸி பதிலடி

டெல்லி தேர்தலில் வாக்களித்தது தவறா? - தாப்ஸி பதிலடி
Updated on
1 min read

டெல்லியில் உள்ள வாக்கு அட்டையை மும்பைக்கு மாற்றச் சொன்னவருக்கு தாப்ஸி பதிலடிக் கொடுத்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் தொடங்கி தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தாப்ஸி. தமிழில் ஜெயம் ரவியுடன் 'ஜன கன மன', இந்தியில் 'தப்பாட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்று (பிப்ரவரி 8) டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தன் குடும்பத்தினருடன் சென்று வாக்கைப் பதிவு செய்தார் தாப்ஸி.

அப்போது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து "நாங்கள் வாக்களித்து விட்டோம். நீங்கள்?" என்று பதிவிட்டார். அந்தப் புகைப்படத்தைக் குறிப்பிட்டு, ட்விட்டர் தளத்தில் அவரை பின்தொடர்பவர் "மும்பையில் வாழ்பவர்கள் எங்களுக்காக ஏன் முடிவெடுக்கிறார்கள். தாப்ஸி மும்பைக்கு இடம்பெயர்ந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அவரது வாக்கு அட்டையையும் இடம் மாற்ற வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

இவருக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் தாப்ஸி, "மும்பை அளவு இல்லையென்றாலும் டெல்லியிலும் நான் வாழ்கிறேன். எனது வருமானத்துக்கு டெல்லியில் தான் வரி கட்டுகிறேன். இங்கு வாழ்ந்து இந்த இடத்துக்குப் பங்காற்றாத பல பேரை விட அதிகமாக டெல்லியை நேசிப்பவள், வாழ்பவள் நான்.

எனது வசிப்பிடத்தை பற்றி கேள்வி கேட்காதீர்கள். உங்களுடையதைப் பற்றி, உங்கள் பங்களிப்பைப் பற்றி கவலைப் படுங்கள். ஒரு பெண்ணை டெல்லியிலிருந்து வெளியேற்றலாம். ஆனால் இந்த பெண்ணிடமிருந்து டெல்லியை வெளியேற்ற முடியாது. மேலும் நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைச் சொல்ல நீங்கள் யாருமில்லை.

இந்த ஒரு பதிலே நான் எவ்வளவு தூரம் டெல்லியைச் சேர்ந்தவள் என்பதைச் சொல்லிவிடும் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் தாப்ஸி. எப்போதுமே தைரியமாக அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in