

‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் தளபதி பேச்சுக்காகக் காத்திருக்கிறேன் என பிரபல மலையாள நடிகரான அஜு வர்கீஸ் ட்வீட் செய்துள்ளார்.
விஜய்யின் படங்களைப் போலவே, அவருடைய பேச்சைக் கேட்கவெனத் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதில் இருந்து இந்தக் கூட்டம் அதிகரித்திருக்கிறது. தன் ரசிகர்களை ‘நண்பா... நண்பி...’ என அவர் அழைக்கும்போது, கரகோஷம் காதைப் பிளக்கிறது.
எந்த ஊடகங்களுக்கும் பேட்டி தராத விஜய், பொது மேடையில் வாயைத் திறக்கும் ஒரே இடம், தன் படங்களின் இசை வெளியீட்டு விழா என்பதும் இதற்கு முக்கியக் காரணம். வருடத்தில் ஒருநாள் நடக்கும் திருவிழா போல இந்த நிகழ்வைக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகரான அஜு வர்கீஸ், “ ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் தளபதி பேச்சுக்காகக் காத்திருக்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திடீரென இவர் இப்படி ட்வீட் செய்ததற்கு, சமீபத்தில் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையே காரணம் எனக் கூறப்படுகிறது.
எனவே, ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுவதால், அஜு வர்கீஸ் இப்படி ட்வீட் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘மாஸ்டர்’ படத்தில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடியும் முன்பே இதன் அனைத்து உரிமைகளும் சேர்ந்து 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு தற்போது நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வருகிறது.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...