

திரைத்துறையினர் 'ஒத்த செருப்பு' படத்தைக் கொண்டாடியிருக்க வேண்டும் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. கடந்தாண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்
மேலும், இந்தப் படம் பல்வேறு விருதுகளையும் வென்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கத் தவறவிட்டவர்கள், தற்போது ஸ்ட்ரீமிங் தளங்களில் பார்த்துவிட்டு பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்தப் படத்தின் இந்தி மற்றும் ஹாலிவுட் ரீமேக் பேச்சுவார்த்தைகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாகத் தன்னை பின்தொடர்பவர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்து வருபவர் பார்த்திபன். தற்போது பார்த்திபனின் ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு "சார், நீங்கள் இங்கு இருக்க வேண்டியவரே அல்ல. இங்கிருப்பவர்கள் அரசியலில் சினிமாவும், சினிமாவில் அரசியலும் கலப்பார்கள். நான் உங்களிடம் இன்று சொல்கிறேன், யூகிக்க முடியாத ஒரு கதையை எப்படி எடுக்க வேண்டும் என்று உங்களின் படத்தை ஒவ்வொரு (மொழி) திரைத்துறையிலும் பேசுவார்கள்" என்று பாராட்டித் தெரிவித்தார்.
அவருடைய பாராட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக பார்த்திபன், "ஆம். திரைத்துறை ஒத்த செருப்பு படத்தைக் கொண்டாடியிருக்க வேண்டும். என்ன செய்ய. இதை விட ஒரு சிறந்த படத்தை முயற்சிக்கிறேன். ஆனால் ரசிகர்கள் என் படத்துக்கு உகந்த அதிகபட்ச பாராட்டை எனக்குத் தந்திருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
தவறவிடாதீர்: