

விஜய் வீட்டில் நடந்து வரும் சோதனை தொடர்பாகக் கருத்து கூறிய காயத்ரி ரகுராம், அமைதியாக இருங்கள். எதையும் பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'பிகில்' படத்தின் செலவு மற்றும் வருமானம் தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனம், விஜய் வீடு, ஸ்கிரீன் சீன் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள் ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று (பிப்ரவரி 5) ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சோதனை தற்போது வரை முடியவில்லை. இந்தச் சோதனை தொடர்பாக வருமான வரித்துறை சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே, விஜய் ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும அரசியல் கட்சியினர் பலரும் இந்தச் சோதனை தொடர்பாக தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது விஜய் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை தொடர்பாக, காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், "விஜய் வீட்டில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை பற்றி யாருக்குமே உண்மை தெரியாது. கண்மூடித்தனமாக அது குறித்துக் கருத்துச் சொல்ல வேண்டாம்.
அதிகாரிகளிடமிருந்து தெளிவான தகவல் கிடைக்கட்டும். எல்லோரும் அவரவர் சொந்த அறிக்கையைச் சொல்வது அபத்தமாக இருக்கிறது. யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம். இது வெறும் விசாரணை மட்டுமே. எந்தக் கற்பனையும் வேண்டாம். ஒரு விஜய் ரசிகையாக மற்ற விஜய் ரசிகர்களுக்குச் சொல்கிறேன், அமைதியாக இருங்கள். மற்றவர்களுக்கு, எதையும் பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
தவறவிடாதீர்