

'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்காக, நடிகர்கள் ஒப்பந்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். சிம்புவின் பிறந்த நாள் முடிவடைந்துவிட்டதால், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் இந்தப் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், படத்தின் படப்பிடிப்புக்கான தேதிகளில் அவரிடம் தேதிகள் இல்லை. இதனால் இறுதியில் அவருக்குப் பதிலாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில், "தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மிக்க நன்றி . என்ன ஒரு கதை, என்ன ஒரு வர்ணனை. அற்புதமாகக் கதை சொன்னதைக் கேட்டு நான் மலைத்துவிட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக எல்லைகள் தாண்டிப் போகும். என் நண்பர் சிம்புவுடன் கை கோப்பதில் மிக்க மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் வரிசையில் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன், கலை இயக்குநராக சேகர், எடிட்டராக ப்ரவீன் கே.எல், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
தவறவிடாதீர்