

விஜய் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் சமயத்தில், இயக்குநர் ரத்னகுமாரின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
'பிகில்' படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம், விஜய் வீடு, ஸ்கிரீன் சீன் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள் என இப்போது வரை வருமான வரி சோதனை முடியவில்லை.
இதில் பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டிலிருந்து 77 கோடி ரூபாய் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவரது வீடுகளிலும் 'பிகில்' படம் தொடர்பான கணக்கு வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, 'மாஸ்டர்' படத்தில் பணிபுரிந்திருக்கும் இயக்குநர் ரத்னகுமாரின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. "’மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குக் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை அவர் வெளியிட்ட 30 நிமிடங்களில் சுமார் 2500 ரீ-ட்வீட்களையும், 5000 லைக்குகளையும் தாண்டியுள்ளது.
இயக்குநர் ரத்னகுமார் மட்டுமல்ல, பல்வேறு விஜய் ரசிகர்களும் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குக் காத்திருப்பதாக ட்வீட் செய்து வருகிறார்கள். இதனை 'Master Audio Launch' என்று தேடினால் ட்விட்டரில் பல ட்வீட்கள் கிடைக்கின்றன.
பண மதிப்பிழப்புக்கு மட்டும் தொலைக்காட்சி ஊடகங்களைச் சந்தித்து விஜய் பேட்டியளித்தார். அதற்குப் பிறகு தனது கருத்துகள் அனைத்தையுமே இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது குறிப்பிட்டு வந்தார். 'மெர்சல்', 'சர்கார்' மற்றும் 'பிகில்' ஆகிய இசை வெளியீட்டு விழாக்களில் விஜய்யின் பேச்சு பெரும் விவாதமாக உருவானது.
தற்போது நடந்துள்ள வருமான வரி சோதனை தொடர்பாக, 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தவறவிடாதீர்