'மாலிக்' படத்தின் கதைக்களம், ஃபகத் பாசிலின் உழைப்பு: இயக்குநர் மகேஷ் நாராயணன்

'மாலிக்' படத்தின் கதைக்களம், ஃபகத் பாசிலின் உழைப்பு: இயக்குநர் மகேஷ் நாராயணன்
Updated on
2 min read

'மாலிக்' படத்தின் கதைக்களம் மற்றும் ஃபகத் பாசிலின் உழைப்பு குறித்து இயக்குநர் மகேஷ் நாராயணன் பேட்டியளித்துள்ளார்.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபகத் பாசில், பிஜு மேனன், நிமிஷா சஜயன், வினய் போர்ட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாலிக்'. பல்வேறு கெட்டப்களில் ஃபகத் பாசில் நடித்து வருவதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆண்டோ ஜோசப் தயாரித்து வரும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தின் கதைக்களம் மற்றும் ஃபகத் பாசிலின் உழைப்பு குறித்து இயக்குநர் மகேஷ் நாராயணன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

''கடலோர நிலப்பரப்பில் நடக்கும் கதை. அந்தப் பகுதி கிராமத்தில் வசித்த ஒருவரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை. அவரது வாழ்க்கையிலிருந்து ஒரு சில விஷயங்கள் மட்டும் கையாண்டிருக்கிறோம்.

இரண்டு கடலோர கிராமங்களுக்கு இடையே மோதல் எப்படி நடந்தது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. இதனால் ஏற்பட்ட சோகம், அது சிறுபான்மையின மக்களை எப்படிப் பாதித்தது என்பதைப் பற்றி இந்தப் படம் சொல்லும்.

நாயகன் சுலைமான் அந்த கிராம மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகிறான். வேறொரு ஊரிலிருந்து புலம் பெயர்ந்து வரும் அவனை மாலிக் அல்லது முதலாளி என்று அனைவரும் அழைக்கின்றனர். அந்த மக்களின் நிலம், வீடு, நம்பிக்கை, தொழில் ஆகியவற்றுக்கு வரும் அச்சுறுத்தலை மாலிக் எதிர்க்கச் சொல்லி ஊக்கப்படுத்துகிறான். சிக்கலான தருணங்களில் தலைவனாக உயரும் மாலிக் அந்த மக்களை ஒன்றுபடுத்துகிறான்.

1965-2018 காலகட்டத்தில் நடக்கும் கதை. இடம், மக்களின் மாற்றத்தைக் காட்ட வேண்டும். அதை எந்தக் கடலோரப் பகுதியை வைத்தும் காட்ட முடியாது. உண்மையில் அந்தச் சம்பவம் நடந்த இடத்தில் நான் படம்பிடிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அங்கு அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் என் நண்பர்களும் கூட.

கடைசியில் கொச்சியின் கலமாசேரி பகுதியில் ஆறு ஏக்கர் நிலத்தில் கலை இயக்குநர் சந்தோஷ் ராமன், சாஜன் இருவரும் அரங்கம் அமைத்தனர். திருவனந்தபுரம் கடலோர பகுதியின் பேச்சு வழக்கு தேவைப்படுவதால் சில கதாபாத்திரங்களில் கடலோரப் பகுதியைச் சேர்ந்த மக்களே நடிக்க வைக்கப்படுகின்றனர்.

ஃபகத் பாசிலின் திரை வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்டமான திரைப்படம் இதுதான். 21 வயதில் ஆரம்பித்து 58 வயது வரை இந்தக் கதாபாத்திரத்தை அவர் பிரதிபலிக்க 10லிருந்து 15 கிலோ எடை வரை குறைத்துள்ளார். அவரைப் போலவே மற்ற நடிகர்களும் எடை குறைத்து, ஏற்றியுள்ளனர்''.

இவ்வாறு இயக்குநர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in