Published : 16 Jan 2020 07:43 PM
Last Updated : 16 Jan 2020 07:43 PM
'சூப்பர் டீலக்ஸ்' சம்பவத்தை நினைவுக் கூர்ந்து, விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அஸ்வந்த்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனால் அவர் நடித்து வரும் படங்களின் குழுவினர் அவரது பிறந்த நாளைக் கேக் வெட்டி விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். மேலும், படத்தின் சிறப்பு பிறந்த நாள் போஸ்டர்களும் வெளியிட்டு வருகிறார்கள்.
இதுமட்டுமன்றி விஜய் சேதுபதியுடன் நடித்த நடிகர் - நடிகைகளும் தங்களது சமூக வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த அஸ்வந்த்தும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் பிறந்த நாளுக்காக தனது ட்விட்டர் பதிவில் அஸ்வந்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:
ஹேப்பி பர்த் டே விஜய் சேதுபதி சார். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது. அதில் ஒரே ஒரு காரணம் மட்டும் சொல்லட்டா.
ஒரு நாள் 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக வீட்டில் ஷுட்டிங் பண்ணிட்டு இருந்தோம். அப்போது உங்களைப் பார்க்க நிறைய ரசிகர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். அப்போது நீங்கள் ஒரு அக்காவிடம் "என்ன அக்கா.. எப்படியிருக்க.. நல்லாயிருக்கியா.. உங்க வீட்டுல இன்றைக்கு என்ன குழம்பு" என்று கேட்டீர்கள். அதற்கு "மீன் குழம்பு, வேண்டுமா சாப்பிடுகிறீர்களா” என்று கேட்டார். "என்ன அக்கா.. இப்படி சொல்லிட்ட.. கொடு அக்கா.. சாப்பிடுறேன்" என்று சொன்னீர்கள். அந்த அக்கா குழம்பு கொடுக்க, நீங்கள் நல்ல சாப்பிட்டீர்கள்.
மறுநாள் படப்பிடிப்புக்கு எல்லாம் தயாராக இருக்கும் போது, இயக்குநர் சாரிடம் "சார்.. ஒரு நிமிஷம்.. ஒரு அக்கா எனக்கு மீன் குழம்பு கொடுத்தாங்க. அவருக்கு நன்றி சொல்லிட்டு வர்றேன்" என்று கேட்டுவிட்டு, வீட்டுக்கே போய் நன்றி சொல்லிவிட்டு வந்தீர்கள். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது சார். இப்படியே இருங்க சார். மாறாதீங்க சார்.
இவ்வாறு விஜய் சேதுபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அஸ்வந்த்
Happy birthday @VijaySethuOffl sir. love you so much #SuperDeluxe #Rasukutty #Ashwanth pic.twitter.com/U3X9UFU4i2
— Ashwanth Ashokkumar (@actorashwanth) January 16, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT