பரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ

பரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ
Updated on
1 min read

ஆசியாவின் பெரிய கிரவுட் ஃபண்டிங் படத்தை, யூ-டியூப் தளத்தில் பிரபலமான 'பரிதாபங்கள்' குழு உருவாக்குகிறது.

யூ-டியூப் தளத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் ஆகியோரைக் கிண்டல் செய்து வீடியோக்களை உருவாக்கும் பக்கம் 'பரிதாபங்கள்'. சமீபத்தில் கூட நித்தியானந்தா, வெங்காய விலை ஆகியவைப் பற்றி இவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் யூ-டியூப் பக்கத்தில் ட்ரெண்ட்டானது.

சில மாதங்களுக்கு முன்பு, கிரவுட் ஃபண்டிங் முறைப்படி படம் எடுக்க களம் இறங்கியிருக்கிறார் கள் ‘பரிதாபங்கள்’ கோபி - சுதாகர் குழுவினர். அறிமுக இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார்கள்.

இந்தப் படத்தை உருவாக்க 8 கோடி ரூபாய் தேவையென்றும், அப்பணம் முழுமையாக வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவித்தார்கள். இதற்காகப் பணம் அளித்தவர்களுக்கென்று பிரத்யேக மொபைல் செயலி ஒன்றையும் உருவாக்கினார்கள். அதில் படத்துக்கு ஆகும் செலவு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறினார்கள்.

அதன்படியே, 8 கோடி ரூபாய் வசூலாகி ஆசியாவின் பெரிய கிரவுட் ஃபண்டிங் படமாக இவர்கள் உருவாக்கும் படம் அமைந்துள்ளது. இதனால், படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'ஹே மணி கம் டுடே Go டுமாரோ' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 15) நடைபெற்றது.

இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், ராதாரவி மற்றும் யூ-டியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in