'டெடி' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் மசூம் ஷங்கர் 

இயக்குநர் ஷக்தி செளந்தரராஜன், ஆர்யாவுடன் மசூம் ஷங்கர்
இயக்குநர் ஷக்தி செளந்தரராஜன், ஆர்யாவுடன் மசூம் ஷங்கர்
Updated on
1 min read

ஆர்யா நடித்து வரும் 'டெடி' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் மசூம் ஷங்கர் நடித்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.

'டிக்:டிக்:டிக்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சக்தி செளந்தரராஜன். 'டெடி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா இருவரும் நாயகன் - நாயகியாக நடித்து வருகிறார்கள்.

இவர்களோடு சதீஷ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி சரவணன் ஸ்டண்ட் மாஸ்டராகவும், சிவநந்தீஸ்வரன் எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர்.

ஐரோப்பாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் '90 ML' படத்தில் நடித்த மசூம் ஷங்கர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகப் படக்குழுவும் அறிவித்துள்ளது.

'டெடி' படத்தை முழுமையாக முடித்துவிட்டு, பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஆர்யா. இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in