Published : 13 Nov 2019 06:55 PM
Last Updated : 13 Nov 2019 06:55 PM
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' படத்தை முடித்துவிட்டார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.
2020-ம் ஆண்டு பொங்கலுக்கு 'தர்பார்' வெளியாகவுள்ளது. ஆனால், இதற்கு முன்னதாகவே ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, சிவா இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, சன் பிக்சர்ஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஜினி படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் டி.இமான்.
ரஜினி - சிவா இணையும் படத்தில், சூரியும் நடிக்கவுள்ளார். ஆனால், படக்குழு இன்னும் இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், தனது படங்களின் வழக்கமான தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன் ஆகியோரை இந்தப் படத்திலும் உபயோகப்படுத்த சிவா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் தொடர்பான அறிவிப்பு இந்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We are happy to announce that for the first time @immancomposer will be the music director for Superstar @rajinikanth’s movie #Thalaivar168@directorsiva#ImmanForThalaivar168 pic.twitter.com/vuvAMzw4Cg
— Sun Pictures (@sunpictures) November 13, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT