Published : 07 Oct 2019 01:14 PM
Last Updated : 07 Oct 2019 01:14 PM

சொன்னதைச் செய்த ரஜினி: கலைஞானத்துக்கு புதிய வீடு வழங்கினார்

கலைஞானத்துக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசியதைப் போலவே, சென்னையில் அவருக்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்துள்ளார் ரஜினி.

1980 -90களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகத்திறமைகள் உண்டு. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார்.

கலைஞானம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்காக பாரதிராஜா தலைமையில் ஆகஸ்ட் 14-ம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்க, ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

இந்த விழாவில் ரஜினி பேசுவதற்கு முன்பு, சிவகுமார் பேசும் போது, "கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார். தமிழக அரசு அவருக்கு வீடு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். அடுத்ததாக ரஜினி பேசும்போது, "இப்போதும் அவர் வாடகை வீட்டில்தான் இருக்கிறார் என்று சிவகுமார் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அமைச்சர் கடம்பூர் ராஜு, பெரிய மனதுடன் முதல்வரிடம் சொல்லி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்தார். அவருக்கு என் நன்றி. ஆனால், இந்த வாய்ப்பை அரசாங்கத்துக்கு நான் தரமாட்டேன். உடனடியாக, பாக்யராஜ் ஒரு வீடு பார்த்துவிட்டுச் சொல்லட்டும். அவருக்கு சொந்த வீடு வாங்கித் தருகிறேன்" என்று பேசினார் ரஜினி.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜ், கலைஞானத்துக்கு வீடு பார்க்கும் பணியைத் தொடங்கினார். ரஜினி, 'தர்பார்' படப்பிடிப்புக்காக மும்பை செல்வதற்கு முன் செக் ஒன்றைத் தயார் செய்து தனது ராகவேந்திரா மண்டபத்தில் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். இடையே, பாக்யராஜிடமும் தொலைபேசி வாயிலாக வீடு பார்க்கும் பணி குறித்து விசாரித்தார்.

இறுதியாக, விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேசன் நகரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தரை தளத்தில் உள்ள வீட்டைப் பார்த்து, அதில் வசிக்க சம்மதம் தெரிவித்தார் கலைஞானம். 3 படுக்கையறை கொண்ட இந்த வீடு 1,320 சதுர அடி கொண்டதாகும். இந்த வீட்டை, கலைஞானத்துக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் ரஜினி. இதன் மதிப்பு 45 லட்ச ரூபாய் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (அக்டோபர் 7) காலை கலைஞானத்துக்குத் தந்த புதிய வீட்டுக்கு ரஜினி வந்தார். கலைஞானம் பொன்னாடை போர்த்தி அவரை வரவேற்றார். அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி, பாபா படம் ஒன்றையும் ரஜினி பரிசாக வழங்கினார். அதைத் தொடர்ந்து ரஜினி, கலைஞானத்தின் குடும்பத்தினரிடம் நீண்ட நேரம் உரையாடிவிட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x