Published : 23 Sep 2019 09:42 AM
Last Updated : 23 Sep 2019 09:42 AM

திரை விமர்சனம் - சூப்பர் டூப்பர் 

சத்யாவும் ( ‘ஆண்மை தவறேல்’ துருவா) அவரது மாமாவான சிவ ஷாராவும் சில்லறைத் திருடர்கள். பெரிதாகப் பணம் பார்க்கும் முடிவுடன் ஆள் கடத்தலில் இறங்குகிறார்கள். கடத்தவேண்டிய வரை விட்டுவிட்டுத் தவறுதலாக, போதை தடுப்புப் பிரிவு காவல் அதிகாரியின் மகளான ஷெரினை (இந்துஜா) கடத்திவிடுகிறார்கள். கடத்திய நாளிலேயே ஷெரினின் அப்பா கொலையாகிறார். ஷெரினை யும், அவரது காரையும் தேடி அலைகிறது ஒரு சமூக விரோத கும்பல். இதை அறிந்துகொள்ளும் ஷெரின், சத்யாவின் உதவியைப் பெற்று, தனது அப்பாவைக் கொன்ற வர்களைப் பழிவாங்கக் கிளம்புகிறார். இதற்கிடையில் சத்யாவும் ஷெரினின் காரைத் தேடி அலைகிறார். நாயகியின் காரை சமூக விரோத கும்பலும், நாயகனும் தேடி அலைய என்ன காரணம், நாயகியின் பழிவாங்கும் படலம் நடந்தேறியதா, இல்லையா என்பது கதை.

அவல நகைச்சுவைக்கும், அதிரடி திருப்பங்களுக்கும் ஏற்ற கதைக்களம் என்று நம்பி ‘போதைப் பொருள் கடத்தல் கதை’யை கையில் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஏகே என்கிற அருண் கார்த்திக். அந்த வகையில் நாயகன், நாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் திருப்பங்களை சுவா ரஸ்யமும், திடுக்கிடலும் நிறைந்தவை யாக அமைத்து, பார்வையாளர்கள் எதிர்பாராத தருணத்தில் அவற்றை சாதுர்யமாக விடுவித்துக் காட்டி இருக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு என்பது, ஒரு திரைக்கதையில் இடம்பெறும் திருப் பங்களுக்கும் பொருந்தும். திரைக் கதையில் திருப்பங்களின் எண்ணிக் கையை கொஞ்சம் குறைத்திருக்க லாம்.

கடத்தி வந்த பெண்ணையே காத லிப்பது, தன்னைக் காதலிப்பவ னையே எதிரிகளை அழிக்கும் ஆயுத மாகக் கையாள நினைப்பது, போதைப் பொருள் கும்பலிடம் இருந்து திருடிக்கொண்டு வந்து அவர்களிடமே அதை விற்கச் சென்று மாட்டிக்கொள்வது என அவல நகைச் சுவை தருணங்கள் படத்தில் விரவிக் கிடக்கின்றன.

அதேநேரம், குடும்பப் பார்வையா ளர்களை விரட்டியடிக்கும் ‘அடல்ட் நகைச்சுவை’ தருணங்களும் படத் தில் விரவிக் கிடக்கின்றன.

துருவாவுக்கு இது 2-வது படம். ஆறடி உயரத்துக்கு நின்று ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி செய்கிறார். நடனமும் நன்றாகவே வருகிறது. ஆனால், நடிப்பு என்று வரும்போது தீவிரம் காட்டியிருக்க வேண்டிய பல காட்சிகளில் தேமே என்று நின்று விடுகிறார்.

இந்துஜா படத்தின் நாயகி மட்டுமல்ல; 2-ம் கதாநாயகன் என்றும் கூறிவிடலாம். இதுவரை குடும்பப் பாங்கான வேடங்களில் பாராட்டு களை அள்ளிவந்த இவர், முதல் முறை யாக தனக்கு கிளாமர் வேடமும் பொருந்தும் என்பதை, பொட்டில் அடித்தமாதிரி நடித்துக் காட்டியிருக் கிறார்.

குறிப்பாக தனது அப்பாவின் கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை அறியும் இடங்களில் அவரது நடிப்பு ‘ஹை க்ளாஸ்’. இந்துஜா கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும், குத்துப் பாடலில் அவரைத் தவிர்த்துவிட்டு, ஆக்‌ஷன் காட்சிகளில் சற்று அதிக மாகப் பயன்படுத்தியிருந்தால் படத் தின் சுவாரஸ்யம் மேலும் கூடியிருக் கும். படத்தில் திருப்பங்கள் மிரட்டுவது போலவே இந்துஜாவின் மேக்கப்பும் மிரட்டுகிறது.

சிவ ஷாரா உடல்மொழியை அதிகம் நம்பும் நகைச்சுவையாளர். இந்தப் படத்திலும் அதைச் செவ்வனே செய்திருக்கிறார் என்றாலும் பல இடங்களில் அவரது வசன நகைச் சுவை ‘பஞ்சர்’ ஆகிவிடுகிறது.

திருப்பங்களைப் போலவே வில் லன்களின் எண்ணிக்கைக்கும் கத்தரி வைத்திருக்கலாம். வில்லன்களாக ஆதித்யா, னி இருவரும் கொடுத்த கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்திருப் பதோடு பார்வையாளர்களுக்கு பயத்தையும் காட்டிவிடுகிறார்கள்.

திவாகரா தியாகராஜனின் இசை யில் பாடல்கள் கேட்கும்படியாக ஒலிக்கின்றன. தற்போது பின்னணி இசையில் நேர்த்தியாக ‘ஸ்கோர்’ செய்யும் இசையமைப்பாளர்களின் பட்டியலில் திவாகராவையும் சேர்க்கலாம்.

இசையைப் போலவே தளபதி ரத்தினம் - சுந்தர்ராம் கிருஷ்ணன் இணை ஒரு குற்றவுலக நகைச்சுவைப் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவையே கொடுத்திருக்கிறது.

ஆக்‌ஷன் மனநிலையைத் தந்து கொண்டே இருக்கும் விதமாக படத் தொகுப்பு செய்திருக்கிறார் முகன் வேலு.

பலமுறை எடுத்தாளப்பட்ட கதைக் களத்தை, திரைக்கதையால் புதியது போல் காட்டுவதில் பெருமளவு வெற்றி பெற்றிருப்பதால் தப்பிப் பிழைக்கிறது ‘சூப்பர் டூப்பர்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x